திருச்சி அருகே துணிகரம் விவசாயி வீட்டில் 16 பவுன் நகை,₹2 லட்சம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு வலை

மணப்பாறை : திருச்சி அருகே விவசாயி வீட்டில் 16 பவுன் நகை மற்றும் ₹2 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி மேலத்தெருவில் வசிப்பவர் சிலம்பரசன்(57). இவரது மனைவி அமிர்தம் (55). இவர்களுக்கு சரண்யா (27) என்ற மகளும், சரத்குமார் (25) என்ற மகனும் உள்ளனர். விவசாயியான சிலம்பரசன், மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிலம்பரசன் தோட்டத்துக்கும், மகன் மற்றும் மகள் வேலைக்கு சென்று விட்டனர். தோட்டத்து வேலைக்கு செல்வதற்காக அமிர்தம், வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் அருகில் மறைவிடத்தில் வைத்து விட்டு சென்றார். பின்னர் மீண்டும் மதியம் அமிர்தம் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ₹2லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் லிலி வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதில் மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: