சென்னை பெரம்பூரில் நள்ளிரவில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது

சென்னை : சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து 8-க்கும் மேற்பட்ட கும்பல் இளங்கோவனை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே இளங்கோவன் உயிரிழந்த நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்

சென்னை பெரம்பூர் சுக்கன் ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் தெற்கு பகுதி கழகச் செயலாளராக உள்ளார். நேற்று இரவு கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து செம்பியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.மேலும் கொலை சம்பவம் குறித்து கேட்டறிவதற்காக செம்பியன் காவல் நிலையம் வந்து கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். இதில் நள்ளிரவில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து 8-க்கும் மேற்பட்ட கும்பல் இளங்கோவனை வெட்டிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 5 பட்டா கத்திகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: