மாமன்ற கூட்டத்தில் அறிமுகம் தாம்பரம் மாநகராட்சிக்கு தனி லோகோ: மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார்

தாம்பரம்: தாம்பரம் மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சிக்கு தனி லோகோவை, மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஆகியோர் முன்னிலையில், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்குளத்தூர் சேகர், கல்விக்குழு தலைவர் கற்பகம் சுரேஷ், எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மேயர் வசந்தகுமாரி நிருபர்களிடம் கூறியதாவது:

தாம்பரம் நகராட்சியில் வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ், 12 மழைநீர் வடிகால்வாய் பணிகள் ரூ.30.75 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

2 அறிவுசார் மையங்கள், 1 வணிக வளாகம் மற்றும் 3 நவீன எரிவாயு தகனமேடை என ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை மேம்படுத்தல், பூங்கா அபிவிருத்தி, மண் சாலையினை பேவர்பிளாக் சாலை மற்றும் சிமென்ட் சாலையாக மாற்றுதல், தினசரி சந்தை மேம்பாடு செய்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 15வது மத்திய நிதிக்குழு மான்யத்தின் கீழ், 9 நகர்ப்புற சுகாதார நலமைய கட்டிடங்கள் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் செம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கு, ரூ.51 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 2 குளங்களில் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் 4 பொது கழிப்பறைகள், 2 சமுதாய கழிப்பறைகள் மற்றும் 16 சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு நிதி 2022 - 2023ன் கீழ், 78 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள், 12.422 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 37,803 தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றிட ரூ.48.33 கோடியில் பணிகள் துவங்கப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டம் 2022 - 2023ன் கீழ், மண் சாலையினை சிமெண்ட் சாலையாக மாற்றிடும் பணி, மழைநீர் வடிகால்வாய், கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் 2.0ன் கீழ், 9 பசுமை உரக்குடில்கள் ரூ.5.19 கோடி மதிப்பீட்டிலும், 1 சமுதாய கழிப்பிடம் மற்றும் 1 பொது கழிப்பிடம் ரூ.59 லட்சத்திலும், உலர் கழிவுகளை மறுசுழற்சி அடிப்படையில் பொருள்மீட்பு கட்டுமான பணிக்கு, ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நகர்புற நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அன்னை அஞ்சுகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக புதிய கட்டிடம் கட்ட ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதனைதொடர்ந்து 2023 - 2024ம் நிதி ஆண்டிற்கான தாம்பரம் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை நிதி குழு தலைவர் ரமணி ஆதிமூலம், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகு மீனா ஆகியவரிடம் சமர்ப்பித்தார்.

பின்னர் கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் பேசுகையில், 2023 - 2024ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட மதிப்பீட்டிற்கான மொத்த வரவுகள் மற்றும் செலவுகள். வருவாய் மற்றும் மூலதன நிதி வரவு - ரூ.492.18 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி வரவு - ரூ.181.29 கோடி, ஆரம்பக் கல்வி நிதி வரவு - ரூ.28.76 கோடி என மொத்தம் வரவு ரூ.702.23 கோடி. வருவாய் மற்றும் மூலதன நிதி செலவு -  ரூ.472.47 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி செலவு - ரூ.180.66 கோடி, ஆரம்பக் கல்வி நிதி செலவு - ரூ.18.40 கோடி என மொத்தம் செலவு ரூ.671.53 கோடி.

வருவாய் மற்றும் மூலதன நிதி உபரி - ரூ.19.71 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி உபரி - ரூ.63 லட்சம், ஆரம்பக் கல்வி நிதி உபரி - ரூ.10.36 கோடி என மொத்தம் உபரி ரூ.30.70 கோடி. வருவாய் நீதி வரவு - ரூ.294.42 கோடி செலவு ரூ.241.84 கோடி. மூலதன நிதி வரவு - ரூபாய் 197.76 கோடி, செலவு ரூ.230.63 கோடி. குடிநீர் மற்றும் வடிகால் நிதி வரவு - ரூ.80.82 கோடி, செலவு ரூ.60.64 கோடி. குடிநீர் மற்றும் வடிகால் மற்றும் மூலதன நிதி வரவு - ரூ.100.47 கோடி, செலவு ரூ.120.02 கோடி. ஆரம்பக் கல்வி நிதி வரவு - ரூ.28.76 கோடி, செலவு ரூ.18.40 கோடி என மொத்த வரவு ரூ.702.23 கோடி, மொத்த செலவு ரூ.671.53 கோடி. வருவாய் மூலதான நிதியின் கீழ் அரசிடமிருந்து பெறப்படும் மான்யம், டுபிகோ நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கடன் மற்றும் பொது நிதியிலிருந்தும் மாநகர மேம்பட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.5150.67 லட்சத்தில் புதிதாக மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு கட்டிடம், மாநகர பகுதியில் மருத்துவமனை கட்டிடங்கள், ஆய்வுக்கூடம், பூங்காக்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு, மின்மயானங்கள் மற்றும் கட்டிட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு திட்டத்தில் அரசு மான்ய நிதியில் மழைநீர் வடிகால்கள் மாநகராட்சி பகுதி முழுவதும் அமைக்கப்படும். திடகழிவு  மேலாண்மை திட்டத்திற்கும், குப்பையை தரம் பிரிக்கும் பணிக்கும் தேவையான இயந்திரங்கள் புதியதாகவும் மற்றும் தாளவாட பொருட்களுக்கு 1028 லட்சத்தில் வாங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கும்,. மாநகரட்சி அலுவலக பயன்பாட்டு பணிகளுக்கு வாகனங்கள் ரூ.482.35 லட்சத்தில் வாங்குவதற்கு (கன மற்றும் இலகு ரக வாகனங்கள்) உத்தேசிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகரட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் புதிய சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.6.48 கோடியில் புதிய எல்.இ.டி விளக்குகள் பொருத்துவதற்கும், குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் மற்றும் சிட்லபாக்கம் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்கம்பங்கள் மற்றும் எல்.இ.டி விளக்குகள், யு.ஜி கேபிள்கள் ரூ.98 லட்சம் முழு மான்யமாகவும் ஆகமொத்தம் ரூ.7.46 கோடியில் 4 புதிய தெருமின்விளக்குள் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரூ.18.08 கோடியில் அனகாபுத்தூர் பகுதியில் 17.50 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.9270 லட்சத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று துரிதமாக மேற்கொண்டு விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.125 லட்சத்தில் ஆழ்துளை மற்றும் கைபம்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. இம்மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ரூ.1500 லட்சம் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் மொத்த வருவாயில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் 2023 - 2024ம் ஆண்டுக்கான வரவு செலவு தலைப்பின்கீழ் 5 மணடலங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சம அளவில் பணிகள் மேற்கொள்ளும் வகையில் மண்டலத்திற்கு ரூ.5 கோடி என ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்படுகிறது, என்றார். தாம்பரம் மாநகராட்சிகாண புதிய லோகோவை துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஆகியோர் முன்னிலையில், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் வெளியிட்டார்.

Related Stories: