மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று வினா - விடை நேரத்தின்போது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடை அளித்தார்.  சாய்மலை சிவகாமியம்பாள் சமேத உமையொருபாகேஸ்வரர் கோயில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில். ரூ.42 லட்சம் செலவில் உபயதாரர் நிதியோடு 10 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

அதில் 6 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கிற 4 பணிகளுக்கு விரைவில் பணியாணை வழங்கப்பட உள்ளன. அந்த கோயிலினுடைய பாலாலயம் (திருப்பணி) வரும் ஏப்ரல் 10ம் தேதி நடத்திட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 மாத காலங்களில் அந்த கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும்.சங்கரன் கோயில் சட்டமன்ற தொகுதியில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பழமையான கோயில். இந்த கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  ஓராண்டு காலத்திற்குள் முழுமையாக திருப்பணிகள் நிறைவுற்று, குடமுழுக்கு நடைபெறும். அந்த கோயிலில் ஏற்கனவே ஓடாதிருந்த தங்க ரதத்தை விரைவில் தங்க ரத உலா வர வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று, அந்த தங்க ரதத்தை புனரமைத்து, பழுது பார்க்கப்பட்டு இன்னும்  ஓரிரு நாட்களில் வீதி உலா வர இருக்கிறது.

1,589 கோயில்களில், 2,380 குளங்கள் உள்ளன. அனைத்து குளங்களும் தெப்ப ஒளியில், விழாக் காலங்களில் பளிச்சிட வேண்டுமென்ற முதல்வரின் உத்தரவிற்கேற்ப, 2021-22ம் ஆண்டு சுமார் 37 தெப்பக் குளங்கள் 18 கோடி ரூபாயிலும், அதேபோல் 2022-23ம் ஆண்டு சுமார் 40 தெப்பக் குளங்கள் 35 கோடி ரூபாய் செலவிலும், நடப்பாண்டில் 40 கோயில்களில் 40 கோடி ரூபாய் செலவில் தெப்பக் குளங்களை மேம்படுத்தி இருக்கிறோம். மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலுக்கென்று ஒரு வரலாறு உண்டு. 1973ம் ஆண்டு, கலைஞரால் இந்த கோயிலினுடைய திருப்பணி துவங்கப்பட்டது. ரூ.10 கோடி செலவில் திருவள்ளுவர் கோயில் புனரமைக்கப்பட்டு, ஓராண்டிற்குள் குடமுழுக்கு நடைபெறும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: