ஓட்டேரி பகுதியில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தேர்வு பயத்தால் விபரீத முடிவா? போலீசார் தீவிர விசாரணை

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பசவய்யா (42), கொத்தனார். இவரது மனைவி நாராயணம்மா. தம்பதிக்கு, நந்தினி என்ற மகளும், 17 வயதில் திருப்பதி ராஜி என்ற மகனும் உள்ளனர். இதில், திருப்பதி ராஜி பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 12ம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வு நடைபெற்றதால், அதற்காக திருப்பதி ராஜி நேற்று முன்தினம் முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். இரவு 3 மணிக்கு பசவய்யா எழுந்து பார்த்தபோது, அறையில் படுத்திருந்த திருப்பதி ராஜி காணாமல் போயிருந்தார்.

மற்றொரு அறையில் சேலையால் திருப்பதி ராஜி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்த ஓட்டேரி போலீசார், மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு பயத்தால் திருப்பதி ராஜி தற்கொலை செய்து கொண்டானா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: