வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை: வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் அடங்கிய அமணம்பாக்கம், கொமக்கம்பேடு இந்திராநகர், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, வெங்கல், செப்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் 100 பேருக்கு அரசு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பட்டாக்களை இன்னும் உட்பிரிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, பட்டா வைத்திருந்தும் அரசின் கணக்கில் வரவில்லை. இதனால் அரசு நலத்திட்டங்களுக்கு பட்டாக்களை பயன்படுத்த முடிவதில்லை.

இதனை தொடர்ந்து அரசு வழங்கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், மேலும் பட்டா கிடைக்காதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது புதிதாக  பட்டா வேண்டி 200  மனுக்களை திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகனிடம் விவசாய சங்கத்தினர் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களுக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும்.

தோப்பு புறம்போக்கு உட்பட்ட மற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் நேற்று காலை 10 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் பழனி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத், துளசிராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தகவலறிந்த தாசில்தார் மதியழகன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 44 பேருக்கு பட்டா வழங்கினார். மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: