மேட்டூர் அருகே பரபரப்பு பாமக-தவாகவினர் இடையே மோதல்: கார் மீது கல்வீச்சு; வீரப்பன் மனைவிக்கு பாதுகாப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே பாமக-தவாகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், பதற்றம் நிலவுகிறது. இதனால், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரைக்காட்டில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று, கர்நாடக வனத்துறை தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கூறப்படும் காரவடையான் (எ) ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேசுகையில், பாமகவை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அங்கிருந்த பாமகவினர் ஆத்திரமடைந்து, பொதுக்கூட்ட மேடையை நோக்கிச் சென்றனர். அப்போது, தவாகவினர், மேடைக்கு யாரும் செல்லாதபடி எழுந்து நின்றனர். மோதலை தடுக்க முயன்ற போலீசாருக்கும்-பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் பரவியதும் பாமகவினர், கோவிந்தபாடி, கருங்கல்லூர், கொளத்தூர் பகுதிகளில் ஆங்காங்கே திரண்டனர். இதனிடையே, கூட்டம் முடிந்து தவாக தலைவர் வேல்முருகனை, போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேச்சேரி அருகே சென்ற போது, தவாக நிர்வாகிகள் காரை, பாமகவினர் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பதற்றம் நிலவுவதால் மேச்சேரி நான்குரோடு பகுதியில் உள்ள வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: