குண்டர் சட்ட கைதை விசாரிக்கும் அறிவுரைக் குழும நடவடிக்கையை மறுசீராய்வு செய்ய வேண்டியுள்ளது: வக்கீல்கள் கருத்து தெரிவிக்க ஐகோர்ட் கிளை அழைப்பு

மதுரை: குண்டர் சட்ட கைதை விசாரிக்கும் அறிவுரை குழுமத்தின் நடவடிக்கையை மறுசீராய்வு செய்ய வேண்டியுள்ளது என்பதால் வக்கீல்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலூரைச் சேர்ந்த  கணேஷ்குமார், இவரது சகோதரர் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதாகினர். கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அவரது சகோதரர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை அறிவுரை குழுமம் ரத்து செய்தது. தன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையையும் ரத்து செய்யக் கோரி கணேஷ்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் , ‘‘மனுதாரர் மற்றும் அவரது சகோதரர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை படித்துப் பார்த்தோம். இருவரும் ஒரே வழக்கில் கைதாகியுள்ளனர். நிலுவையில் உள்ள வழக்குகளும் இருவர் மீதும் உள்ளது. ஆனால், ஒருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தும், ஒருவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தும் ஒரு வரி அல்லது இரு வரியில் அறிவுரை குழுமம் உத்தரவிட்டுள்ளது. அறிவுரை குழுமத்தின் நடவடிக்கை போதுமானதல்ல. அறிவுரை குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் உள்ளிட்டோர் தான் உள்ளனர்.

மனுதாரர்கள் தரப்பில் போதுமான ஆவணங்கள் கொடுத்தும் அறிவுரை குழுமம் பரிசீலிக்கவில்லை என வாதிடப்படுகிறது. அறிவுரை குழுமம் பின்பற்ற வேண்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள் தான் இருக்க வேண்டும் என்பதால், அறிவுரை குழுமத்தின் நடவடிக்கையை நீதித்துறை சார்ந்து மறுசீராய்வு செய்ய வேண்டியுள்ளது. எந்தவொரு குடிமகனின் தனிப்பட்ட சுதந்திரமும் பாதிக்கப்படக் கூடாது. இதுகுறித்து விரிவாக விவாதித்து முடிவெடுக்கும் வகையில் மூத்த வக்கீல்கள் பி.குமார், அருள் வடிவேல் சேகர், பிரபாகர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுடன் கருத்து தெரிவிக்க விரும்பும் வக்கீல்கள் யாரும் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: