போலீசாரால் சுடப்பட்டவருக்கு சிகிச்சை கோவை போலீஸ் கமிஷனர் ஆஜராகி விளக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவை ரேஸ் கோர்ஸ் நிலையத்தினர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கொலை வழக்கில் சரணடைய வந்தவரை சிறையில் அடைத்துள்ளதால், சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது. ஆட்கொணர்வு மனுவில் சிகிச்சை மற்றும் விசாரணை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், காலில் குண்டடிப்பட்ட நிலையில் கோவையில் அனுமதிக்கப்பட்டவரை கடலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளார் என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஒருவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவர் இந்த நாட்டின் குடிமகன்தான். அவர் சிகிச்சை பெற உரிமையில்லையா என்று கேள்வி எழுப்பி, சிகிச்சை குறித்த விவரங்கள் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்படாதது துரதிஷ்டவசமானது என்றனர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரேஸ் கோர்ஸ் காவல் ஆய்வாளர், சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: