நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டை பகுதிகளில் இரவு நேரத்தில் மண் திருட்டு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகளில் இரவு நேரத்தில் மண் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி உள்ளது. இங்கு, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், மப்பேடுபுத்தூர், கொளப்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டை ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மண் திருடி விற்பதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குன்றம் பகுதியில் 4 முதல் 5 ஏக்கர் பரப்பளவு வரை உள்ள ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன. இங்கு, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பல் இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து மண் அள்ளுகின்றனர். மேலும், மேற்படி இடங்களில் அள்ளப்படும் மண்ணை நெடுங்குன்றத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சொந்தமான முட்புதர்களில் கொட்டி பதுக்கி வைக்கின்றனர். பின்னர், அதனை பகல் நேரங்களில் 4 லாரிகளில் எடுத்து சென்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக ரூ.5000 முதல் ரூ.7,500 வரை விற்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நெடுங்குன்றம் ஊராட்சியில் மண் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: