மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கள் முதல்வர் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் முதல்வரானவர் அல்ல: அமைச்சர் சேகர்பாபு - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்

பொதுத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் தான் எங்களுடைய முதல்வர். கட்சியில் குழப்பம் ஏற்பட்டபோது முதல்வரானவர் அல்ல என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதனால் அவருக்கும் எடப்பாடி பழனிசாமி இடையேபேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மீதான பொது விவாதம் பின்வருமாறு:

குமாரபாளையம் தங்கமணி(அதிமுக): கண்ணுக்கு எட்டிய தொலைவில் எதிரிகளே இல்லை என்று  சொன்னவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் எடப்பாடி பழனிசாமி.

அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் கண்ணுக்கு எட்டிய தொலைவில் எதிரிகளே இல்லை என சொல்வது இந்த ஆட்சியில் அல்ல. 2011ம் ஆண்டு சொன்ன வார்த்தை. இன்றைய தமிழ்நாடு முதல்வர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 98 இடங்களில் வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். கண்ணுக்கு எட்டிய தொலைவில் எதிரிகளே இல்லை என்ற கூற்றை பொய்ப்பித்தவர் எங்களுடைய முதல்வர்.

தங்கமணி: நான் உங்களை சொல்லவில்லை.

அமைச்சர் சேகர்பாபு: வெளிப்படையாகவே சொல்கிறேன். இந்த வார்த்தையை சொன்னவர் அப்போதைய முதல்வராக இருந்தவர் (ஜெயலலிதா). அடுத்து நடத்த சட்டமன்ற தேர்தலில் 98 இடங்களில் வென்று திமுக இந்த அவையை ஆண்டது.

 எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: இப்போது பேசும் அமைச்சரை உருவாக்கியது, அவர் தான் அதனை அவர் மறந்து

விடக்கூடாது.

அமைச்சர் சேகர்பாபு: யார் யாரை உருவாக்கினார் என்பது வாதம் அல்ல. இந்த அவையில் எடுத்து வைத்த சொற்களுக்கு தான் பதில். யார் யாரை உருவாக்கினார்கள். யார் யாரால் உருவாக்கப்பட்டு மக்களால் தேர்தெடுக்கப்படாமல் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்.

தங்கமணி: 2016ம் ஆண்டு 98 சட்டமன்ற உறுப்பினர்களை  உருவாக்கினார்கள். அதனை இல்லை என கூறவில்லை. இப்போது நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்போம் என்று சொன்னவர்களுக்கு தான் அந்த பதிலை சொன்னேன்.

தங்கமணி: உங்களுடைய முதல்வர் எப்படி வந்தாரோ அதேபோல தான் எடப்பாடி பழனிசாமியும் முதல்வராக வந்தார்.

அமைச்சர் சேகர்பாபு: எங்களுடைய தலைவர் எப்படி முதல்வராக வந்தார் என நாட்டு மக்களுக்கு தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். (அதிமுகவினர் கோஷம்)

அமைச்சர் சேகர்பாபு: பொதுத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். ஆனால் கட்சியில் ஏற்பட்ட விபத்தின்போது அப்போது ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தேர்தெடுக்கப்பட்ட முதல்வரே தவிர. மக்களால்  தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் எங்களுடைய முதல்வர் தான்.

தங்கமணி: தேர்தல் வாக்குறுதியில் சட்டமன்றம் 100 நாட்கள் நடைபெறும் என கூறினர். 100 நாட்கள் கூட வேண்டாம். கடந்த காலம் போல 40 நாட்கள் இருந்தால் துறை வாரியாக மானிய கோரிக்கை மீது பேசுவதற்கு ஒரு  வாய்ப்பாக இருக்கும். ஒருநாளைக்கு  இரண்டு, மூன்று மானிய கோரிக்கை வைத்தால் அது சம்பிரதாயமாக இருக்கும்.

சபாநாயகர் அப்பாவு: 1991-92ம் ஆண்டு 12 நாள் அவை நடந்தது. 2001-02ம் ஆண்டு 15 நாள் தான் அவை நடந்தது. 2004-05ம் ஆண்டு மானிய கோரிக்கையில் 6 நாட்கள் தான் நடந்தது. 2020-21ம் ஆண்டு 11 நாள் தான் நடந்தது. ஆனால் இந்த மானிய கோரிக்கை 21 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு காரணம் ஈரோடு இடைத்தேர்தல் வந்ததால் 45 நாட்கள் காலதாமதம் ஆனதால் மட்டுமே தவிர நேரத்தை ஒன்றும் குறைக்கவில்லை. நாட்களை ஒன்றும் குறைக்கவில்லை.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: தமிழ்நாட்டை காட்டிலும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களிலும் 10 மற்றும் 12 நாட்களிலேயே மானிய கோரிக்கை மற்றும் பட்ஜெட் தாக்கல் என்பது நடைபெற்று விடுகிறது. எனவே, மானிய கோரிக்கைக்காகவே சட்டமன்றம் நடத்துவது என்பது தேவையில்லை.

Related Stories: