கடந்த தேர்தலில் 40 சீட், 400 கோடி ரூபாய் தருவதாக அதிமுக, பாஜ கூட்டணிக்கு அழைத்தது: ஈரோட்டில் சீமான் பேட்டி

ஈரோடு: கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ 40 சீட் மற்றும் ரூ.400 கோடி கொடுப்பதாக கூறி கூட்டணிக்கு அழைத்தது என சீமான் தெரிவித்தார்.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தலில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததற்காகவும், குறிப்பிட்ட நேரத்தை கடந்து பிரசாரம் செய்ததற்காகவும் வழக்குப்பதிவு செய்தார்கள். அதிமுக கொடுத்த ஊழல் குற்றச்சாட்டு, தேர்தல் வரும்போது, வழக்கமாக நடைபெறக்கூடிய வாடிக்கையான ஒன்று‌. திருவிழாக்களில் நடக்கும் நாடகம் போன்று குற்றச்சாட்டுகளை பார்த்து ரசித்து சிரித்து விட்டு செல்வதுதான்.

பாமக அன்புமணிக்கு அதிமுக கூட்டணியில் இணைய மட்டுமே வாய்ப்பு உள்ளதால், இணைந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிக்கும் முழுமையான வேட்பாளர்கள் பட்டியலை வருகிற பிப். 21ம் தேதி நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை. கரூரில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், விஜயை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவரப்படவில்லை. அவரை சிபிஐ விசாரிப்பதில் குற்றமில்லை. இதை வைத்து கருத்து எதுவும் சொல்ல முடியாது. ஜனநாயகன் படத்தில் மத ரீதியாக காட்சிகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அனுமதி வழங்கலாம். இவ்வாறு சீமான் கூறினார்.

தொடர்ந்து, கடந்த தேர்தலில் 40 சீட், ரூ.400 கோடி தருவதாக அழைத்தும் கூட்டணிக்கு செல்லவில்லை என நேற்றைய கூட்டத்தில் நீங்கள் பேசியிருந்தீர்களே என்ற நிருபர்களின் கேள்விக்கு, ‘‘ஆம் அதிமுக, பாஜதான் கூட்டணிக்கு அழைத்தார்கள்’’ என்றார். பணம் தருவதாக சொன்னார்களா? என கேட்டதற்கு, ‘‘அது இப்போ இல்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிற்கிறேன். வேண்டாம் என சொன்ன பிறகு யார் அழைத்தால் என்ன?’’ என பதிலாளித்தார்.

Related Stories: