கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்

ஆண்டிபட்டி: கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் வெப்ப அயற்சியானல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் உயர் ரக கறவை மாடுகள், எருமைகள் தீவனம் உட்கொள்வது 10 முதல் 15 சதவீதம் குறையும். பால் உற்பத்தியும் 20 முதல் 30 சதவீதம் குறையும். வெயிலில் இருந்து கால்நடைகள் உடலை குளிர்வித்து கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்ட மாடுகள் நிழலிலேயே இருக்கும்.

உணவிற்கோ, தண்ணீர் குடிக்கவோ செல்லாது. அதிகளவில் தண்ணீர் உட்கொள்வதுடன், தீவனம் சாப்பிடும் அளவு குறையும். எப்போதும் நின்று கொண்டே இருக்கும். உடல் வெப்பநிலை அதிகரிப்பால் சுவாசம் குறையும். வாயை திறந்தே சுவாசிக்கும். அதிக அளவிலான உமிழ்நீர் சுரக்கும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்படும் மாடுகள் குணமடைய அதிக காலம் பிடிக்கும். கன்றுகள் ஈனுவதில் சிக்கல் ஏற்படும். அறிகுறிகள் தென்படும் மாடுகளுக்கு தேவையான அளவு தண்ணீர், நிழல், காற்றோட்டம் மற்றும் செயற்கை முறையில் குளிர்ச்சி அளிக்க வேண்டும்.

கால்நடைகள் குடிக்கும் நீரில் பாசிகள் இல்லாமல் சுத்தமாக வழங்க வேண்டும். மாட்டு கொட்டகைகள் கிழக்கு, மேற்காக இருக்க வேண்டும். மரங்கள் அதிகளவில் இருக்க வேண்டும். கூரை உயரமாக அமைத்து தரையிலிருந்து மின்விசிறியை 9 அடி உயரத்தில் அமைக்க வேண்டும். பழைய சாக்குகள் கொட்டகையின் மீது பரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும். அடர் தீவனத்தின் அளவை அதிகரித்து, தாது உப்பி கலவையை மாடுகளுக்கு அளிக்க வேண்டும். இதனால் மாடுகளை வெப்ப அயற்சி மற்றும் நோய் இல்லாமல் பால் உற்பத்தி குறைவின்றி கிடைக்கும்.

ஆடுகளை பாதுகாக்க ஐடியா

செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்க்கும் விவசாயிகள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் வேலைகளில் ஆடுகளை மேய்க்க வேண்டும். ஆடுகளின் மீது தண்ணீர் தெளித்து சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும். ஆட்டு கொட்டகைகளை சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். இறைச்சி மற்றும் முட்டை கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மின்விசிறி ஏற்பாடு செய்து, நீரை தெளிக்க வசதி செய்ய வேண்டும். வெயில் நேரத்தில் தனிக்கவனம் செலுத்தி கோழிகளை பராமரிக்க வேண்டும்.

நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்ப்போர் அவற்றிற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். விரைவில் செறிக்கக்கூடிய உணவை வழங்கிட வேண்டும். அவைகளுக்கு தகுந்த நேரத்தில் குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி போட வேண்டும். வெயிலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: