புதுச்சேரி: புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமரன் (42). இவருக்கு புனிதா என்ற மனைவியும் கனிஷ்கா (17) என்ற மகளும், கிஷன்குமார் (16) என்ற மகனும் உள்ளனர்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர், மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் விழுப்புரம் சாலையில் உள்ள கண்ணகி அரசு பள்ளி அருகே உள்ள பேக்கரியில் செந்தில்குமரன் தனது ஆதரவாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மூன்று பைக்கில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், செந்தில்குமரன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி வீடியோ காட்சி ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த நித்தியானந்தம் (43), சிவசங்கர் (23), ராஜா (23), வெங்கடேஷ் (25), கார்த்திகேயன் (23), விக்னேஷ் (26) கடலூரை சேர்ந்த பிரதாப் (24) ஆகிய 7 பேர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு சரணடைந்தனர். அவர்களை விசாரித்த நீதிபதி, 7 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.