நாட்டின் ஜனநாயகம் காலில் போட்டு நசுக்கப்பட்டுள்ளது: ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி முடிவு கட்டி வருகிறார்.! மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

டெல்லி: நாட்டின் ஜனநாயகம் காலில் போட்டு நசுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.  

நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு உடையணிந்து கலந்து கொண்டனர் ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கருப்பு உடையணிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகவும் சென்று தங்களது எதிர்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: காலின் கீழே போட்டு ஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது.

இதனை வெளிப்படுத்தவே, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறோம். நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி முடிவு கட்டி வருகிறார். முதலில் அவர், சுயாட்சி அமைப்புகளை காலி செய்த பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களை மிரட்டி அவர்களது சொந்த அரசாங்கங்களை கொண்டு வந்தனர். அதன்பின்னர், அரசுக்கு முன்னால் அடிபணியாதவர்களை வளைப்பதற்காக, அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது இவ்வாறு கூறினார்.

Related Stories: