திருமண வரவேற்பு விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு: கோயம்பேட்டில் பரபரப்பு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் நடைபெற்ற தோழியின் திருமண வரவேற்பு விழாவில் நடனமாடியபோது மயக்கம்போட்டு விழுந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரை சேர்ந்தவர் சத்யசாய்ரெட்டி(21). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து சென்னை அருகே பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு (சி.எஸ்.சி) படித்துவந்தார்.

நேற்றிரவு கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோழி பூனம் சசோதரியின் திருமண வரவேற்பு விழாவில் நண்பர்களுடன் சத்யசாய் கலந்துகொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நண்பர்களுடன் சத்யசாய் நடனமாடியுள்ளார். அப்போது திடீரென சத்யசாயின் காதில் இருந்து ரத்தம் வழிந்துவந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் சத்யசாய் கதறியபடி மயக்கம் போட்டு விழுந்ததால் உடனடியாக அவரை மீட்டு அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, ‘’வரும் வழியிலேயே சத்யசாய் இறந்துவிட்டார்’ என்று கூறினர். அவரது சடலத்தை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவல்படி, கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சத்யசாய் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மாணவர் சத்யசாய்ரெட்டிக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெகுநேரமாக நடனமாடியதால் வலிப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்து இறந்து உள்ளார்’’ என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர  விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: