வருங்கால வைப்பு நிதியில் இருந்து உயர்த்திய ஓய்வூதிய பணத்தை எடுப்பதை எளிதாக்க வேண்டும்: ஓஎன்ஜிசி அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் இருந்து, (இபிஎப்ஓ) தங்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய பணத்தை எடுப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அவற்றை எளிதாக மாற்ற வேண்டும் என ஓஎன்ஜிசி அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சங்க ஆலோசகர் கலைமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.என்.ஜி.சி.யில் பணியாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் பணம் எடுப்பதில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.  உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஊழியர்களால் கூட்டு விருப்பப் படிவம் சமர்ப்பிக்க முடியாத நிபந்தனைகளை இ.பி.எப்.ஓ விதிக்கிறது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆதார் எண் யு.ஏ.என். உடன் இணைக்கப்படாததால் அதை அணுகுவது கடினமாக உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் செலுத்தும் ஆணை மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் கைமுறை அணுகல் மூலமாகவும் அணுக அனுமதிக்க வேண்டும். சில பணியாளர்கள் சமர்ப்பித்த ஆன்லைன் விண்ணப்பங்களை, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுப்பாமல், தொலைதூர செயலாக்கத்திற்காக இ.பி.எப்.ஓ தடுக்கிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக ஓ.என்.ஜி.சியின் செயலாக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணையின்படி கடந்த 60 மாத சம்பளத்தின் அடிப்படையில் இருக்க வேண்டிய ஓய்வூதிய ஊதியம் குறித்து இ.பி.எப்.ஓ தங்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உயர் ஓய்வூதியத்திற்கான விருப்பத்தை சமர்ப்பிக்க இ.பி.எப்.ஓ  வழங்கும் ஆன்லைன் வசதி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப சரியானதல்ல. எங்களின் கோரிக்கையை இ.பி.எப்.ஓ ஏற்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: