கல்லூரியில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க உதவிட கோரி மெரினா கடற்கரையில் வயலின் வாசித்த மாணவன்: மனிதாபிமானத்துடன் நிதி கொடுத்த போலீஸ்

சென்னை: தனது கல்லூரி படிப்பை தொடர வயலின் வாசித்து உதவி கேட்ட பொறியியல் மாணவரால் சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சுற்றுலா தளம் என்பதால் ஒவ்வொரு நாளும் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கடற்கரையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வாலிபர் ஒருவர் ‘எனது உயர்படிப்புக்கு உதவி செய்யுங்கள்’ என்று பதாகையுடன் வயலின் வாசித்து கொண்டிருந்தார். இதை பார்த்த மக்கள் பலர் அந்த வாலிபர் அருகே நின்று அவர் வாசிப்பதை ரசித்து கேட்டனர். சிலர் வாலிபரின் படிப்புக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், தகவல் அறிந்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் மற்றும் அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வயலின் வாசித்து உதவி கேட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த அஜித் என்றும், சென்னை அருகே உள்ள காரம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஏரோஸ்பேஸ் பொறியியல் 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பெற்றோர் தேங்காய் நார் மூலம் கயிறு திரிக்கும் வேலை செய்து வருவதாகவும், உயர் படிப்புக்கு பணம் இல்லாததால் ‘வயலின்’ வாசித்து பொதுமக்களிடம் உதவி கேட்டதாகவும் கூறி

அழுதுள்ளார்.

பின்னர் உதவி கமிஷனர் பாஸ்கர், கல்லூரியில் படிக்க இதுபோன்று பொது இடங்களில் உதவி கேட்க கூடாது என்றும், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அறிவுரை கூறி பொறியியல் மாணவன் அஜித்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், அவனுக்கு தங்களால் முடிந்த சிறிதளவு பணம், மதிய உணவுகளை போலீசார் வாங்கி கொடுத்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: