தண்டையார்பேட்டையில் கொசுமருந்து தெளிக்கும் பணி: மண்டலக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் வீடு வீடாக கொசுமருந்து அடிக்கும் பணியை மண்டலக்குழு தலைவர் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 38வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் 1 முதல் 6 தெருக்கள் உள்ளன. இதன் அருகே பக்கிங்காம் கால்வாய் உள்ளதால் இந்த பகுதியில் அதிகளவு கொசு இருப்பதாக அங்குள்ள மக்கள் புகார் எழுப்பினர். அதன்பேரில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொசுமருந்து அடிக்கும் வண்டியை 4வது மண்டலக்குழு தலைவர் நேதாஜிகணேசன் நேற்று தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை சார்பில் ஒரே நேரத்தில் 5 கொசுவண்டிகள் மூலம், ஒவ்வொரு பகுதியிலும் வீடுவீடாகச் சென்று கொசுமருந்து அடித்து பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீட்கும் விதமாக மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டனர். இதுகுறித்து மண்டலக்குழு தலைவர் நேதாஜிகணேசன் கூறும்போது, 4வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் இதேபோல் கொசுமருந்து அடித்து பொதுமக்களை காக்கும்விதமாக சுகாதாரத்துறை செயல்படும்.

தண்டையார்பேட்டை மண்டலத்தைப் பொறுத்தவரை பொதுமக்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் கூறும் குறைகள் உடனடியாக அதிகாரிகள் மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

Related Stories: