வெயிலின் தாக்கம் தொடர்வதால் மண்பானை விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை மற்றும் அதன்பின் வடகிழக்கு பருவ மழை பிறகு, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மழை இல்லாமல் போனது. ஜனவரியில் இருந்து  வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதில் ஒரு சில நாட்களில் மழை பெய்தாலும், பகல் நேரத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கமே ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, சுற்றுவட்டாரத்தில் அங்கலக்குறிச்சி, கோட்டூர், சமத்தூர், ரங்கசமுத்திரம், நெகமம், சேத்துமடை, ஆவல் சின்னாபாளையம், பொன்னாபுரம், வடுகபாளையம், வடக்கிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர், கோடை காலத்தில் தாகத்தை தணிக்க குடிநீர் பருகுவதற்கான பானைகளை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொண்டனர். இருப்பினும், கோதவாடி குளம் உள்ளிட்ட இடங்களில் களிமண் எடுப்பதற்கு தடை தொடர்வதால், வெளியிடங்களில் ஆர்டர் மூலம் வாங்கப்படும் களிமண்ணை கொண்டு மண்பானை தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

வெயிலின் தாக்கம் தொடர்ந்து நிலவும் நிலையில், கிராமங்களில் தயாரிக்கப்படும் மண்பானைகள், நகரின் பல இடங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், சில வீடுகளிலும், வீதிகளிலும் மண்பானை அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. இந்த மண்பானைகள் ரூ.75 முதல் ரூ.500 வரை என அளவிற்கு தகுந்தாற்போல் விலை போகிறது. கோடை துவங்குவதற்கு முன்பாகவே, இப்போதே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் சூழலில் அக்னி நட்சத்திரம் துவங்கும்போது, மண்பானைகளுக்கு மேலும் கிராக்கி ஏற்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: