தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழகத்தில், 2022-23ம் ஆண்டில்ரூ.1,406 கோடி மதிப்பீட்டில் சுமார் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை-உத்திரமேரூர் இரு வழி நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை சிறு பாலங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது செங்கல்பட்டு கலெக்டர் ஆ,ர.ராகுல்நாத், உத்திரமேரூர் எம்எல்ஏ., க.சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனை 2021-22ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ்ரூ.54 கோடியில் அகலப்படுத்தும் பணி  நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் தீவிர நடவடிக்கை எனும் பெயரில் இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகின்றன.  இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாக விபத்துகளை குறைக்க முடியும். அதேநேரத்தில் விரைவான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தமுடியும் என்பது தமிழக முதல்வரின் இலக்காகும். இதன்படி, 2021 மற்றும் 22 கால கட்டத்தில்ரூ. 2,500 கோடியில் 252 கிலோ மீட்டர் சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டன. 2022-23ம் ஆண்டில் 1,406 கோடி மதிப்பீட்டில் சுமார் 150 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக முதலமைச்சர் என்ன நினைக்கிறார் என்றால் வாகன விபத்துகளை தவிர்க்க வேண்டும். அதற்கு சாலைகளை மேம்பாடு செய்ய வேண்டும்.

அகலப்படுத்த வேண்டும். சாலைகளை அகலப்படுத்தும்போது ஒரு சில இடங்களில் மரங்கள் அகற்றவேண்டியுள்ளது. அவ்வாறு சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் அகற்றப்படும்போது பணிகள் நிறைவடைந்த உடன் அகற்றப்படும் ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  இதில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: