‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு

சென்னை: சென்னை கலெக்டர் அமிர்த்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:  ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையம் தொடங்கலாம். இந்த திட்டம் மூலம், இளைஞர்கள், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை இல்லாத பகுதிகளில், இந்த சேவை மையங்களை அமைக்கலாம்.  அந்தவகையில், அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்துக்கு அருகாமையிலேயே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான முக்கிய நோக்கம் அதிகப்படியான இ-சேவை மையங்களை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கான சிறந்த சேவைகளை அளிப்பது. எனவே, சென்னையில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். (www.tnesevai.tn.gov.in/ www.tnega.tn.gov.in)  என்ற இணைய முகவரிகளை பயன்படுத்தலாம். மேலும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. காலை 11.30 மணி முதல் இரவு 10 மணிவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இ-சேவை மையம் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 14ம் தேதி கடைசிநாளாகும். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: