ஓட்டலில் வரிந்துகட்டி சாப்பிடும் அசைவ பிரியர்கள் உஷார் பல நாடுகள் தடைவிதித்த மீன்கள் ‘பிஷ் பிங்கர்’ பெயரில் விற்பனை

பெரம்பூர்: பொதுமக்களின் மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் பல்வேறு நோய்கள் மக்களை ஆட்டி படைத்து வருகிறது. எதற்காக நோய் வருகிறது, எதனால் வருகிறது என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் நோய்கள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து, மாத்திரைகளை நாள் கணக்கில் சாப்பிட்டுவிட்டு பின்பு மீண்டும் பழைய உணவு பழக்க வழக்கத்தை தொடர்ந்து வரும் மக்களால் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளாமல் 70 வயது வரை வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பில் கட்டுப்பாடற்ற உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க,  விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை மூளை சலவை செய்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பொதுமக்களின் உடல் நலத்தை பற்றி சற்றும் யோசிக்காமல் தொடர்ந்து வியாபார நோக்கத்துடனும்  செயல்பட்டு வருவதால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில், பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நமது நாட்டில் சர்வ சாதாரணமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் நம்ப தயாராக இல்லை. அப்படி பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட சில மீன்களை நம்நாட்டில் சர்வ சாதாரணமாக மக்கள் சாப்பிடுகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அவர்கள் யோசிப்பது இல்லை. சீனாவில் ஒரு குறிப்பிட்ட மருந்து பொருளையோ அல்லது மரபணு மாற்றப்பட்ட உணவு பொருளையோ தயாரித்தால் முதலில் அதை அண்டை நாடுகளுக்கு அனுப்பி சோதனை செய்து பார்ப்பார்கள். அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் சீனாவில் மரபணு மாற்றப்பட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி பண்ணைகளில் வளர்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த வகை மீன்கள் எப்படிப்பட்ட சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது.  கழிவுநீர் குட்டைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளரும் தன்மையுடன் இருப்பதால் கழிவுகளில் உள்ள நச்சுத்தன்மை இந்த மீன்களிலும் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நம்ம ஊரில் கெளுத்தி மீன் என்று கூறுவார்கள். அதேபோன்று இருக்கும் இந்த வகையான மீன்களுக்கு பல வகையான பெயர்கள் உண்டு. பாஷா மீன் என்று அதிகமாக தெரிவிக்கின்றனர். இந்த வகை மீன்கள் சாப்பிடுவதற்கு மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். விலையும் குறைவு. இறந்து போன கோழிகள், மாமிச வகைகள் இந்த மீன்களுக்கு உணவாக போடப்படுகின்றன.

இவற்றை பிராய்லர் மீன்கள் என்றும் அழைப்பார்கள். சாதாரணமாக, நாம் சாப்பிடும் மீன்களுக்கும் குட்டைகளில் வளர்க்கப்படும் இதுபோன்ற பிராய்லர் மீன்களுக்கும் பலவித வித்தியாசங்கள் உண்டு. இந்த வகையான மீன்களில் பலவித ரசாயன கலவைகள் கலந்துள்ளன. நாட்டு மீன்களைப் போன்று இல்லாமல், அதிலிருந்து சற்று மாறுபட்டு உள்ளது. நாட்டு மீன்களான கெளுத்தி, அயரை, உழுவை, கெண்டை போன்ற   மீன்கள் தற்போது அழிவின் விழும்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசாயன தன்மை உடைய பாஷா மீன், நெய் மீன், பங்கசியஸ் போன்ற பெயர்களில் சந்தையில் பிராய்லர் மீன்கள் விற்கப்படுகின்றன.  

சீனாவில் மரபணு மாற்றம் செய்து தயாரிக்கப்பட்ட இந்த வகை மீன்கள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இப்படி மரபணு மாற்றப்பட்ட மீன்களின் விலை மிகவும் குறைவு. அவ்வளவு எளிதில் கெட்டும் போகாது. இதை பதப்படுத்தி விற்பனை செய்வதால் துர்நாற்றமும் அடிக்காது. பதப்படுத்தி சமைக்கும் போது உருசியாகவும் இருக்கும்.  எனவே, இந்த வகை மீன்கள் எல்லா விதத்திலும் ஓட்டல்களில் வைத்து சமைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏற்றவகை மீன்கள் என்பதால் பெரும்பாலான ஓட்டல்களில் வாங்குகின்றனர். இதை பண்ணை உரிமையாளர்களும் உற்பத்தி செய்கின்றனர். யார் எப்படி போனால் என்ன, எனக்கு லாபம் தான் முக்கியம் என்கின்ற நோக்கில் பலர் இதனை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சில பெரிய ஓட்டல் நிறுவனங்கள் குறிப்பிட்ட இந்த வகை மீன்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இப்படி இறக்குமதி செய்யப்படும் இவ்வகையான மீன்களில் நைட்ரஜன் பெராக்ஸைட், சிட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் கலந்து சுத்தம் செய்யப்படுவதால் சாப்பிடும் பொதுமக்களுக்கு கண்டிப்பாக பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த அளவிற்கு பொதுமக்கள் வீடுகளில் சாப்பிடுகின்றனரோ, அந்த அளவிற்கு ஓட்டல்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி லட்சக்கணத்தில் ஓட்டல் உரிமையாளர்கள்  லாபம் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக, உயர்தர உணவகங்களில் பிராய்லர் மீன்களை அதிகம் பயன்படுத்துவதாகவும்  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மிகக் குறைவான விலையில் வாங்கப்படும் இந்த மீன்களை ‘பிஷ் பிங்கர்’ என்ற பெயரில் பெரும்பாலான உணவகங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஓட்டல்களில் உட்கார்ந்து ஆர்டர் செய்யும் அசைவ பிரியர்கள் பிஷ் பிங்கர் வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அது எந்த வகையான மீன் என்பதை அறிய மாட்டார்கள். சாப்பிடுவதற்கு ருசியாகவும் முள் இல்லாத வகையில் உள்ளதாலும் பெரும்பாலான அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதை பயன்படுத்தி  மரபணு மாற்றப்பட்ட மீன்களை வாங்கி ஓட்டல்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து மக்கள் சாப்பிடுவதால் புற்றுநோய். விந்தணு குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஒவ்வாமை போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும், உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதய  நோயை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  எனவே ஓட்டல்களில் அமர்ந்து மீன்களை சாப்பிடும் முன், அது எந்த வகையான மீன் என்பதை அசைவ பிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மீன்களில் மட்டும் அல்லாது உணவு வகைகளிலும் தடை செய்யப்பட்ட உணவு வகைகளை நன்கு தெரிந்து, அவற்றை தவிர்த்து வந்தால் உடல்ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* பாதிப்பு வருவது உறுதி பிராய்லர் மீன்கள் குறித்து புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘மரபணு மாற்றப்பட்ட மீன்கள் எந்த வகை சூழ்நிலையிலும் வளரும் தன்மையுடையது. ஒரு மீனை தடை செய்தால் பெயரை மாற்றி மீண்டும் ஒரு மீனை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு வளர்ப்பு மீன்களில் பல்வேறு வகைகளில் மீன்களின் பெயர்களை மாற்றி விற்பனை செய்கின்றனர்.  இவ்வாறு விற்கப்படும் மீன்கள் அனைத்தும் மரபணு மாற்றப்பட்ட பிராய்லர் மீன்கள் வகையைச் சேர்ந்தது. இந்த மீன்களை சாப்பிடும்போது நமது டிஎன்ஏவுடன் அந்த வகையான மீன்கள் ஒத்துப்போகாது. இதனால், ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படும் குறிப்பாக, அலர்ஜி சம்பந்தப்பட்ட நோய்கள் அதிக அளவில் வரும். நுரையீரல் தொற்று போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

இந்த வகையான நோய்கள் வரும்போது பரிசோதனை செய்து பார்த்து மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வோம். ஆனால் மீன்களை சாப்பிட்டதால்தான் இந்த பாதிப்பு  என்பதை பெரும்பாலானோர் கண்டறிவது கிடையாது. இந்த வகை மீன்களில் பாதரசம் எனப்படும் ரசாயன தன்மை அதிகமாக இருக்கும் மனிதக் கழிவுகள், இறைச்சிகள், கழிவுநீர் போன்ற அனைத்திலும்  இந்த வகை மீன்கள் வளர்வதால் அதில் உள்ள பாதரசம் மீன்களில் கலக்கிறது. இவற்றை சமைக்கும் போது கூட பாதரச தன்மை மீன்களில் இருந்து போகாது. எனவே கண்டிப்பாக இந்த மீன்களை சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்றிய, மாநில அரசுகள் தடை தடை செய்யப்பட்ட மீன் வகைகளில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெளுத்தி மீன்கள் முக்கியமானது. வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்காவின் கெளுத்தி மீன்களை வளர்க்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த வகை மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இவை எட்டு அல்லது அதற்கும் மேல் உயிர் வாழக்கூடியவை. இதனால் இந்த மீன்கள்  நீர்நிலைகளில் கலந்துவிட்டால் குறிப்பிட்ட நல்ல மீன்களை அழித்துவிடும் என்ற காரணத்தினாலும், இவற்றை உண்பதால் அதிக அளவு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதாலும் இந்த மீன்களை வளர்க்கவும் விற்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

Related Stories: