கழிவு மீன்வலையை பயன்படுத்தி கட்டிட பொருட்கள் உருவாக்கம்!: நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

இந்தியா ஒரு தீபகற்பமாகும். இதில் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மீன் வலைகள் மூலம் மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் மீன் வலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு அது சேதமடைகிறது. மேலும் உபயோகமற்ற அல்லது கைவிடப்பட்ட மீன்வலைகள் மற்றும் கயிறுகளின் விளைவாக கடலின் சுற்றுச்சூழல் தொடர்ந்து சீரழிந்து வருகிறது. இதன்விளைவாக பெரிய மீன்களான திமிங்கலங்கள், கடல் சிங்கங்கள் மற்றும் ஆமைகள் உட்பட ஆண்டுக்கு லட்சக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்துவிடுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் படகுகள் விபத்துக்கு உள்ளாகுகின்றன, மனித இறப்புகளும் ஏற்படுகின்றன.  

உலகின் பெருங்கடல்களில் உள்ள மொத்த பிளாஸ்டிக் மாசுபாட்டில் கிட்டத்தட்ட 10 சதவீதம் தூக்கி எறியப்பட்ட மீன்வலை மற்றும் அதை சார்ந்த பொருட்களால் ஏற்படுகின்றன. இத்தகைய மீன்பிடி வலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க, வலைகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான பொருத்தமான முறைகளை அடையாளம் காண்பது அவசியம். இந்த மீன் வலைகள் பொதுவாக நைலான் இழையிலிருந்து தயாரிக்கப்படும். இவைகள் எளிதில் மக்காத, குறைந்த எடைகொண்ட, வளைவுத்தன்மையுடைய, பளபளப்பான, அதிக வலிமை மற்றும் சிராய்ப்பு எதிர்ப்பு தன்மை கொண்டவையாகும். அதே சமயம், நார்-வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (எஃப்.ஆர்.பி) கலவை பொருட்கள் பல்வேறு உற்பத்தித் துறைகளில் தற்போதைய பொருள்களுக்கு மாற்றுபொருளாக அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் உயர்ந்த பண்புகளான அதிக வலிமை, அதிக முறிவு கடினத்தன்மை, அரிப்பு எதிர்ப்பு, எடைக்குறைவு, குறைந்தசெலவு மற்றும் வடிவமைப்பு நெகிழ்வுத்தன்மை ஆகும்.

வளர்ந்து வரும் இந்தியாவின் நகரங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பெருகியிருக்கிறது. சாதாரண பலமாடிக் கட்டிடம் கட்டி முடிக்க அதிக செலவு மற்றும் அதிக நேரம் தேவைப்படும். மேலும் கட்டிடம் கட்ட கனிம வளங்கள் முதல் கட்டுமானப் பொருட்கள் வரை பயன்படுத்தப் படுகின்றன. கட்டிடப் பணிகளுக்கு பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்ய நாம் இயற்கை வளங்களை சுரண்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அடுக்குமாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ஒட்டுமொத்த எடையும் அதிகரிக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல, பாதுகாப்பற்றதும்கூட. நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.  2050ம் ஆண்டுக்குள் நமது நாட்டில் 60 சதவீதமக்கள் நகர்புறத்தில் வசிக்கும் நிலைவரும். கட்டிடங்களின் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதால், பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் செய்யும்போது பொறுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. இது தொடர்பான ஆய்வில் நாகர்கோவில், கோணம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்களின் வாயிலாக கழிவு மீன் வலையில் இருந்து கட்டுமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகர்கோவில், கோணம் பல்கலைக்கலைகழக பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர் ஸ்டார்வின் கூறியதாவது:

மீனவர்களால் கழிவாக ஒதுக்கப்படுகின்ற மீன்வலைகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் (TNSCST) வழியாகரூ.2,95,000 நிதியை வழங்கியது. இந்த நிதியை பயன்படுத்தி நாகர்கோவில், கோணம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி ஆய்வகத்தில், உபயோகமற்ற கழிவு மீன்வலைகளை பயன்படுத்தி வெவ்வேறு நார் கலவைகளுடன் ஒரு கலப்பின கலவை உருவாக்கப்பட்டது. இந்த கலவைகள் வேறுபட்ட அடுக்குகளைக் கொண்டு எளிய முறையில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த புதிய பொருளின் இழுவிசை, நெகிழ்வுதன்மை, பாரம்தாங்கு தன்மை மற்றும் வெப்ப நிலையை தாங்கும் தன்மையை சோதிக்க அமெரிக்கன் தர நிர்ணயம் (ASTM) மூலம் சோதித்து வெற்றி பெற்று உள்ளோம். மேலும் இது குறைந்த செலவில் அதிக உழைக்ககூடிய பொருளாக பயன்படுகிறது. இது நமது சுற்றுசூழலலைப் பாதுகாக்கும் நோக்கிலும் மேலும் பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படும் பொருளாக பயன்படுகிறது.

இந்த பொருளை மேன்படுத்தும் விதத்தில் ஆராய்ச்சிகாக ஒன்றிய அரசின் கட்டிட பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில் (BMPTC) வழியாக ரூ.8,05,740 நிதி எங்கள் கல்லூரியின் புலமுதல்வர் முனைவர் நாகராஜன் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் வினோத்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த நிதியைக்கொண்டு கல்லூரி ஆய்வகத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் கைவிடப்பட்ட மீன் வலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமானத் தொழிலுக்கு தூக்கி எறியப்பட்ட மீன் வலைகளை உபயோகப்படுத்துவதின் மூலம் மீன்வலைக் கழிவுகள் குறைக்கப்படுகின்றன. கட்டுமானசெலவைக் குறைப்பதற்கும், கனிமவளங்கள் பயன்பாட்டை குறைப்பதற்கும், பேரிடர் சமயங்களில் எற்படும் சிரமங்களைச் சமாளிப்பதற்கும், குறைந்த விலை மற்றும் குறைந்த எடை கொண்ட கட்டிட பொருள்களை மிகவும் எளிமையான முறையில் மீன் வலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கலப்பு கட்டுமான பொருட்கள் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் பிற பண்புகளும் சோதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்த கட்டுமான பொருள், கட்டிடங்கள் அமைக்க சாதகமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த விலையில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சொந்தமாக வீடு கட்ட, கனவு காணும் லச்சக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான வீடுகளைக் கட்டுவதற்கான மிகசிறந்த பொருளாக பரிந்துரைக்கப்படுகிறது. கழிவு மேலாண்மையின் ‘மறுபயன்பாடு’ கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, மீன்பிடி வலை கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிக்கலைக் குறைத்துள்ளோம். மேலும் மறு கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற ஒரு பொருளை உற்பத்தியும் செய்துள்ளோம். இந்த புதிய பொருளுக்கான காப்புரிமையை எங்கள் கல்லூரியின் புல முதல்வர் முனைவர் நாகராஜன் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் வினோத்குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்த கட்ட தொடர் ஆராய்ச்சியாக, இந்த கட்டிட பொருளை மேலும் வலுப்படுத்த பனியன் துணி கழிவுகளை இணைத்து புதிய வகை இலகுவக கட்டிடப்பொருள் செய்ய எங்கள் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் ஆன்சலின்.அ, ராமகிருஷ்ணன்.பெ, மகேஷ்.இரா, ஜெயராஜ்.ம மற்றும் தனேஷ்.ஈ ஆகியோர், புல முதல்வர் முனைவர் நாகராஜன்.வா.ஆ மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் ஸ்டார்வின்.எம்.எஸ் வழிகாட்டுதலின்படி ஈடுபட்டுள்ளார்கள். இந்த புதிய முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் பல அடுக்கு மாடி கட்டிடத்திற்கு ஒரு திருப்பு முனையை எங்கள் மாணவர்கள் செய்து காட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இப்பகுதியில் இடம்பெறும் கண்டுபிடிப்புகளுக்கு வாரம்ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதுபோல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் இருந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மாணவர் கண்டுபிடிப்பு சண்டே ஸ்பெஷல் தினகரன், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. email: studentinvention@dinakaran.com

Related Stories: