3வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அடம் பிடிப்பது ஏன்?: தமிழ்நாடு அரசு செய்தது என்ன?

* மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்தும் இழுத்தடிப்பு

* தற்கொலைகள் அதிகரிப்பால் தொடர் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் முடிவு உலகிலேயே மிகச்சிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உள்ளது. பல நாடுகளில் அதிபர் ஆட்சி, மன்னராட்சிகள் நடந்து வந்தாலும், 75 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் நாட்டை ஆண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், காலத்துக்கே ஏற்ப பல்வேறு சட்டத்திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிராகரிப்பதும், கால தாமதம் செய்வதும், கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும் தொடர் கதையாகி வருகிறது. ஆளுநர்களின் அலட்சியப்போக்கால் பல உயிர்கள் பறிபோவது மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கின்றன.

‘ஆன்லைன் சூதாட்டம்’ இன்று பல உயிர்களை பறித்து உள்ளது. ஆனால், இதை தடை செய்ய ஒன்றிய அரசு முன்வரவில்லை. காரணம், இதன் மூலம் வரும் வரி வருவாய் மோகம்தான். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான உயிர்கள் பறிபோனதால், இதை தடை செய்ய சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. ஆனால் அவர் நிராகரித்தார். இதனால், 2வது முறையாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவசர சட்டத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால், ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கி இருப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கடந்த சில நாட்களுக்கு முன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.  

‘மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவரே ஆளுநர்’ என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக கூறினாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மன்னராட்சி நடத்தி வருகின்றனர். ஆளுநர் என்பவர் மக்கள் பிரதிநிதி அல்ல. ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர். ஒன்றிய அரசின் ஏஜென்ட் என்றே அழைக்கப்படுபவர். இவரால் மக்களுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் சட்டத்தை தடுக்க எந்த உரிமையும் இல்லை. இதனால், ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமில்லாமல், சர்ச்சை பேச்சுகளால் மாநிலத்தில் ஒருவித பதற்றத்தை உருவாக்கி வருகிறார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்பேரில் தன்னிலை விளக்கம் அளித்த அவர், சிறிது காலம் அமைதி காத்தார்.  

தற்போது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கு என்று கூறும் ஒன்றிய அரசு, ஆளுநரின் இந்த செயலை கண்டிக்காதது ஏன்? கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறினாலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஆளுநர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளித்த பிறகும், மசோதாவை அவர் திருப்பி அனுப்பி உள்ளார்.  தற்போது, அனைத்தும் தீர்க்கப்பட்டு மீண்டும் 3வது முறையாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முறை அவரால் நிராகரிக்க முடியாது.

அதே நேரத்தில், ஒன்றிய அரசின் ஆலோசனை இல்லாமல் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 23ம் தேதி அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தத்தால் ஒன்றிய அமைச்சர்களை அடுத்தடுத்து சந்தித்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் அதிகரித்தும் வரும் நிலையில் இந்த முறையும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினால், ஆளுநருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.  - ‘ஆட்டுக்கு தாடியும்,  நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு’ என்று அன்றே கேட்டார் அறிஞர் அண்ணா.

* 20-35 வயதானவர்கள் தற்கொலையே அதிகம்

* நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 65% பேர் ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.  

* ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் 20-35 வயதிற்குட்பட்டவர்கள்தான்.

* ஆளுநர்  குற்றச்சாட்டும்... ஒன்றிய அமைச்சர் விளக்கமும்....  மசோதாவை திருப்பி அனுப்ப 3 முக்கிய விஷயங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:

* ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஒன்றிய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

* இந்த தடை மசோதா உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

*  இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும்.

* மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியதாவது l ‘பந்தயம் மற்றும் சூதாட்டம்’ என்பது இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-ன் 34ம் அம்சமாக வருகிறது.  இதுதொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது.

* மாநிலங்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் ஆன்லைனில் கிடைக்கும் சூதாட்டத்தை சமாளிக்க தங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.

* திறமை விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகள் இடையே வேறுபாடு குறித்து நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன.

* துறைப் பணிகள் விதி ஒதுக்கீடு திருத்தத்தில் 23.12.2022 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் ‘ஆன்லைன் கேமிங்’ ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது.

* பணம் செலுத்துபவர்கள் 50% அதிகம் n ஆன்லைன் விளையாட்டில் கடந்தாண்டு மட்டும்ரூ.12,390 கோடி வருவாய் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

* 2025ல்ரூ.41,450 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

* இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டில் பணம் செலுத்தும் புதிய பயனர்களின் எண்ணிக்கை 2021ல் 50% ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories: