நோன்பு நோற்கும் இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 1 மணி நேரம் முன்பாக வீடு செல்ல அனுமதி: தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் ேகாரிக்கை

சென்னை: ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 1 மணிநேரத்திற்கு முன்பாக வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகைக்கு முன்பிலிருந்தே இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இந்த புனிதமான பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நோன்பு நேரத்தில், மக்கள் சுஹூர் அல்லது செஹ்ரி சாப்பிடுவதற்கு அதிகாலையில் எழுந்திருப்பார்கள். இந்த நேரத்தில் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை, அவர்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ, எச்சிலை கூட விழுங்க  மாட்டார்கள்.  மாலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டு அல்லது நோன்பு கஞ்சி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நோன்பை விடுவார்கள்.

அந்த வகையில், இந்தாண்டு ரமலான் நோன்பை நேற்று முன்தினம் அதிகாலை முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். தற்போது தமிழகத்தில் கடும் வெயில், வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான சூழ்நிலையிலும் இஸ்லாமியர் தங்களது ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை கடைபிடிக்க உள்ளனர்.  ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பாக வீடுகளுக்கு செல்ல பீகார் அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் அரசு ஊழியர்களாக இருக்கும் இஸ்லாமியர் ரமலான் நோன்பு திறக்க 1 மணி நேரத்திற்கு முன்பாக வீடுகளுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: