ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை சிறை நிரப்பும் போராட்டம்: காங்கிரஸ் எஸ்சி துறை அறிவிப்பு

சென்னை: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ  அரசு தொடர்ச்சியாக மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சி செய்து வருகிறது.  அரசியலமைப்பின் தூணாக உள்ள நீதித் துறையை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற பங்களிப்பை தாக்கு பிடிக்க முடியாமல்,  அதானி-மோடி தொடர்புகள் பற்றி அவர் கூறும் தகவல்களுக்கு அஞ்சியே இது போன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த  தகுதி நீக்கத்தை எதிர்த்து வெறுமனே ஒரு கவன ஈர்ப்பு போராட்டமாக அல்லாமல் மாபெரும் சிறை  நிரப்பும் போராட்டமாக நடத்த காங்கிரஸ் எஸ்.சி. துறை முடிவு செய்துள்ளது.  இதில் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.சி. துறை நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள்  மட்டுமல்லாமல், எம்எல்ஏ, எம்பிக்கள், கட்சியின் ஏனைய அமைப்புகளான  இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் மற்றும் பிற  அமைப்புகளின் பேரியக்கத்தினர் பங்கெடுத்துக்கொள்ள கேட்டு  கொள்கிறேன்.  இந்தியாவில் பட்டியலின சமுதாயத்திற்கு பலமும் பாதுகாப்பும்  நேரு குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் தான். அந்த நேரு குடும்பத்திற்கு  சாவர்க்கர் வாரிசுகளால் நடக்கும் அடக்கு முறையை பொறுத்துக் கொள்ள  முடியாது. சென்னையில் திங்கட்கிழமை மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம்  நடைபெறும். இதில் பங்கேற்க அனைவரும் சென்னை வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: