அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்ற மிரட்டலையடுத்து அண்ணாமலையை அழைத்து அமித்ஷா கடும் டோஸ் விட்டுள்ளார். இதனால் கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அவர் அந்தர் பல்டி அடித்துள்ளார். தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய வண்ணம் உள்ளார். ஏற்கனவே, மூத்த தலைவர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனால் மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் போது தான் ஜெயலலிதா, கலைஞர் மாதிரி ஒரு அசைக்க முடியாத தலைவர் என்கிற மாதிரி பேட்டியும் அண்ணாமலை கொடுத்தார். இந்த தலைக்கன பேட்டியால் மற்ற கட்சி தலைவர்களும், பிஜேபி தொண்டர்களுமே அதிர்ச்சியடைந்தனர். யதார்த்தம் தெரியாமல் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூற ஆரம்பித்தனர். இதற்கிடையில் தான் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் கடும் மோதல் உருவானது. தேர்தலில் அதிமுக அணி படு ேதால்வி அடைந்தது. ஈரோடு கிழக்கில் 40,000 சிறுபான்மையினர் ஓட்டு பிஜேபியிடம் சேர்ந்ததால் வராமல் போய் விட்டது என்றும் எடப்பாடி அதிருப்தியில் இருந்தார்.

இதனால், அண்ணாமலைக்கு ஒரு டிரிட்மெண்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, பாஜக நிர்வாகிகளை எடப்பாடி இழுக்க ஆரம்பித்தார். டெல்லி மேலிடத்தில் தனக்கு ெகட்ட பெயர் ஏற்பட்டு விட்டதே என்று அண்ணாமலை கருத நினைத்தார். அதனால், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்ற முடிவுக்கு வந்தார். தனித்து போட்டியிட தயார். அனுமதிக்கவில்லை என்றால் தலைவர் பதவியில் இருந்து  விலக தயார் என்றும் அண்ணாமலை திடீர் மிரட்டல் விடுத்தார்.

அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் 3வது அணி அமைத்து பார்க்கலாம் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இருக்கிறது. 2014 மக்களவை தேர்தலில் 3வது அணி 2 தொகுதியில் வெற்றி பெற்றது. 3வது அணி 18 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியது. இதே மாதிரி ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று நினைத்து இருந்தார். இது தொடர்பாக பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பினார். தனித்து போட்டியிட அனுமதிக்கவில்லை என்றால் தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என்று மோடியையும், அமித்ஷாவுக்கும் மிரட்டல் கொடுக்கும் வகையில் அந்த பேச்சு இருந்தது. இதற்கு தமிழக பாஜவுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். அண்ணாமலையால் தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியாது என்றும் பாஜ தலைவர்கள் பலர் பதிலடி கொடுத்தனர். கட்சி மேலிடமும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வந்தது.

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடத்தில் வெற்றி பெறும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் வந்துவிடும்.  இப்போதையும் வடமாநிலங்களில் எல்லாம் போக 75 சீட் தான் பாஜகவுக்கு தேவையுள்ளது. கர்நாடாகாவில் பாஜக அடி வாங்கி விடும். பீகாரில் அடிவாங்கும். 75 சீட்டை எங்கிருந்து கொண்டு வருவது என்று தெரியாமல் பாஜக முழித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்து அதிரடி நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு சீட் கிடைத்தாலும் சந்தோஷம் தான் என்று டெல்லி மேலிடம் நினைத்து வருகிறது. இந்த ஒரு சீட்டையும் கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நினைத்து இருந்தது. இப்படி அண்ணாமலை தனித்து போட்டி என்று அறிவித்ததால் ெடல்லி மேலிடம் கடுப்பாகி விட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றார். அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு கடுமையான டோஸ் கொடுத்தார்.

கூட்டணி  அமைத்தால் வெளியே போவேன் என்று ெசால்கிறாய். வெளியே போ நீ என்று கடுமையாக எச்சரித்தார். வெளியே போனால் உன் நிலைமை என்னாகும் என்று யோசித்து பார். கட்சியை மிரட்டுகிறாயா? தனிக்கட்சி தொடங்க போறாயா?, உன்னை பற்றி தெரியாதா? தமிழகத்தில் நீங்கள் பண்ணும் ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் கூட்டணி சம்பந்தமாக நாங்கள் பேசி கொள்கிறோம். நீ ஒழுங்கா கட்சியை பாரு என்று எச்சரித்து அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலை கடந்த 2 நாட்களாக கூட்டணி பற்றி எதுவும் பேசவே இல்லை. கூட்டணி பற்றி வாயே திறக்கவில்லை. கூட்டணி என்றால் நான் வெளியே போவேன் என்று சொன்னவர், மாநில தலைவர் பதவி வேண்டாம் என்று சொன்னவர்?. கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். அதற்கு அமித்ஷா கொடுத்த டோஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி  அமைத்து, எடப்பாடி சொல்லும் சீட்டை வாங்கி கொண்டு வேலை பார்ப்பதற்கு அண்ணாமலை தயாராகி விட்டார். அண்ணாமலையின் வீராவேசம் 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை. 24 மணி நேரம் முடிவதற்குள்  அமித்ஷாவை பார்த்து அண்ணாமலை டோஸ் வாங்கி விட்டு திடீர் பல்டி அடித்து விட்டார். இதனால், மாநில தலைவர் மாற்றம் என்ற பயம் கூட அண்ணாமலைக்கு இருந்து வருகிறது. இதனால், தான் அவர் அமைதியாக இருந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: