ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மாற்று பணிகள் இல்லாமல் கரிமூட்டம் தொழிலுக்கு மாறிவரும் விவசாயிகள்: தொழிற்சாலைகள் அமைத்திட கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை இல்லாமல் விவசாயம் பொய்த்து போனது. இப்பகுதியில் வேறு தொழில் துறைகள் இல்லாததால் மாற்று தொழிலாக கரிமூட்டம் போடும் தொழிலில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 35 கிராம ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. இவற்றிற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, வெட்டுக்குளம், கலங்காபுலி, ஆவரேந்தல், பாரனூர், சோழந்தூர், வடவயல், மங்கலம், கலக்குடி, செங்குடி, பூலாங்குடி, குயவனேந்தல், பணிதிவயல், அரியான்கோட்டை, ஆப்பிராய், நத்தக்கோட்டை, நகரி காத்தான், ஆயங்குடி, திருத்தேர்வளை, ஆனந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த ஐந்து வருடங்களாகவே சரியான மழை இல்லாததால் நெல் விவசாயம் பொய்த்து போய்விட்டது.

கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் கனமழை பெய்ந்ததால் விளைந்த நெற்கதிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி வீணாகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்ப்பட்டது. சில கிராமங்களில் மிளகாய், எள், பருத்தி போன்ற விவசாயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் போதிய மழை இல்லாததால் அந்த விவசாயங்களிலும் எதிர்பார்த்தபடியான மகசூல் கிடைக்கவில்லை. ஓரளவு விளைந்த மிளகாய் வத்தலுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய வகையில் எந்தவிதமான தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லை என்பதால், இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் திருப்பூர், கோவை, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகர்புறங்களை தேடி சென்று விடுகின்றனர். மற்றவர்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பிழைப்புக்கு வேறு வழி இன்றி தவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலான பொதுமக்கள் கிராமங்களில் ஏராளமாக உள்ள கருவேல மரங்களை பயன்படுத்தி கரிமூட்டம் போடும் தொழிலில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இப்பகுதியில் காட்டு கருவேல மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி திருப்பூர், கருர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காகவும் கொண்டு சென்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், எங்கள் பகுதியில் சரியான மழை பெய்யாததால் கடந்த 4 வருடமாகவே விவசாயம் இல்லாமல் எங்களது குடும்பங்கள் போதிய வருமானமின்றி மிகவும் அவதிப்படுகிறது. ஏற்கனவே மழை பொய்த்ததால் எங்களில் பலரும் விவசாயத்தில் வருவாய் கிடைக்காமல் கடனாளியாகி விட்டோம்.

கடந்த வருடம் அறுவடை சீசனில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து விளைந்த நெல் மணிகளை வீடு கொண்டு சேர்க்கமுடியாமல் போனது. இந்த வருடமாவது நல்ல மழை பெய்ந்து விடும்... எங்கள் துயரங்கள் தீர்ந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் இந்த வருடமும் போதிய மழை இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியானது. இதனால் மிகவும் துன்பப்படும் நிலை உருவாகிவிட்டது. எங்கள் பகுதிகளில் ஏதேனும் தொழிற்சாலைகள் இருந்தாலாவது எங்களை போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் இங்கே வழி இல்லை.

இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் கரிமூட்டம் போடும் தொழிலில் கால்வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த கருவேல மரங்களை மிகவும் நிதானமாக வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் கை, கால்களை அவற்றின் முட்கள் பதம் பார்த்து விடும். இருப்பினும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் எங்களை போன்றவர்கள் சொந்தமாகவும், கூலிக்காகவும் கரிமூட்டம் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

இதன்படி வெட்டி எடுக்கப்படும் காட்டு கருவேல விறகுகளை கரியாக ஆக்குவதற்கு கரிமூட்டம் போடுகின்றோம். அவ்வாறு போடப்படும் கரிமூட்டங்களில் தீயை அணைப்பதற்கு தண்ணீர் அவசியம். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளதால், டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக ஏதேனும் தொழிற்சாலைகளை அரசு நிறுவ வேண்டும். இதன் வாயிலாக எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மக்களின் வாழ்வாதாரமாக மாறியது: இப்பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை ஒழிக்கப்பட வேண்டியவை என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் இந்த கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவது வழக்கம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் இப்பகுதிகளில் வெகுவாக குறைந்து வருகின்றது. இதன் காரணமாக போர்வெல் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என்று கருதுவோரின் கனவும் பொய்த்துப்போகிறது. இதற்கிடையே கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் அடர்ந்துள்ள இதனை அகற்றுவது அத்தனை எளிமையான காரியமல்ல. இருப்பினும் இன்றைய நிலையில் காட்டு கருவேல மரங்களே இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Related Stories: