காட்பாடியில் 1 மணி நேரம் பரபரப்பு; வீடுகளின் இடுக்கில் காளை மாடு சிக்கியதால் பசு பாசப்போராட்டம்: தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

வேலூர்: காட்பாடியில் வீடுகளின் இடுக்கில் சிக்கிய காளையை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது, பசு மாடு ஒரு மணிநேரம் பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் பொதுப்பணித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறம் அடுத்தடுத்து உள்ள இரண்டு வீடுகளின் சந்து இடுக்கில் காளை மாடு ஒன்று சிக்கி கீழே விழுந்துள்ளதாக காட்பாடி தீயணைப்பு வீரர்களுக்கு நேற்று காலை 8.40 மணியளவில் தகவல் கிடைத்து. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது ஒன்றரை அடி அகலத்தில் உள்ள இடுக்கில் நுழைந்த காளை மாடு வெளியே வர முடியாமல் சிக்கி திரும்ப முயன்றபோது தலைக்குப்புற விழுந்து கிடந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வீட்டின் மாடி மீது ஏறி கயிறுகளை கொண்டு காளை மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சற்று தொலைவு வரை காளையை நகர்த்தி அகலமான சந்து பகுதிக்கு கொண்டு வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி காலை 9.45 மணியளவில் காளையை பத்திரமாக மீட்டனர்.

அப்போது காளை மாட்டின் உடலில் காயங்கள் இருந்தது. இதையடுத்து மாட்டிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றினர்.

இதற்கிடையில் காளை மாட்டை மீட்கும்போது, அத்துடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பசு மாடு அங்கிருந்து செல்லாமல் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து காளையை மீட்க தவித்தது. ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு காளை மீட்கப்பட்டதும், அங்கேயே தவித்து கொண்டிருந்த பசு, பாசத்துடன் நாவினால் தடவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பையும், பசுவின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Related Stories: