தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் தேவையை அதிக அளவில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும். நம் மின் தேவை மற்றும் மின் உற்பத்தியை கருத்திற்கொண்டு அனைவரும் பொறுப்புணர்வோடு அணுக வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான சிறப்பு கவனஈர்ப்பு கொண்டு வந்து அருண்மொழிதேவன் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைசெல்வன் (விசிக), நாகைமாலி (மார்க்சிய கம்யூ.), வேல்முருகன் (மக்கள் வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசியதாவது: நெய்வேலி நிலக்கரி தொழில் நிறுவனம் என்பது மத்திய அரசுக்கு சொந்தமானது. இது நீண்டகால பிரச்சினை. 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை கையகப்படுத்திவிட்டு, வேலைவாய்ப்பு கொடுப்பதாகவும், வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும் சொல்லிவிட்டு, அவற்றையெல்லாம் அந்த நிறுவனம் இதுவரை நிறைவேற்றவில்லை. மூன்றாவது சுரங்கம் உருவாக்குகிறோம் என்ற பெயரில் சுமார் 26 கிராமங்களில் 25,000 ஏக்கர் நிலங்கள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக, சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 1,000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. அந்த கரி காற்றை சுவாசித்து, நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். முதல்வர் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றனர்.

உறுப்பினர்கள் பேச்சுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் குறிப்பாக, தமிழ்நாடு அரசினுடைய மின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனமாக இருக்கிறது. இப்போது அதனுடைய கையிருப்பில் இருக்கக்கூடிய அந்த நிலம் நம்முடைய மின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு முழுமையான அளவில் இல்லாத அளவில் பற்றாக்குறையாக இருக்கக்கூடிய காரணத்தால் புதியதாக நில எடுப்பு என்பது இப்போது, அதற்கு மிக முக்கியமான கட்டமாக இருக்கிறது.  புதிய நிலங்களை ஆர்ஜிதம் செய்தால்தான் அந்த ஆர்ஜிதத்தின்மூலமாக கிடைக்கக்கூடிய பழுப்பு நிலக்கரியை முதலீடாகக்கொண்டு, மூலப்பொருளாககொண்டு மின்சார உற்பத்தியை செய்யக்கூடிய ஒரு நிலையில் இன்றைக்கு இந்த நில எடுப்பு என்பது அவசியமான ஒன்றாக அங்கே இருக்கிறது. வரக்கூடிய பணியிடங்களில், நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய வகையில், அவர்களுக்கு மட்டும் தேர்வில் 20 மதிப்பெண்கள் கூடுதலாக கொடுத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.  

அதேபோல, உயர்த்தப்பட்ட இழப்பீட்டை பொறுத்தவரையில், ஒரு கட்டத்தில் ரூ.23 லட்சமாக இருந்த இழப்பீட்டு தொகை,  பேச்சுவார்த்தைக்கு பிறகு, தற்போது அந்த தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. சேத்தியாதோப்பில் 61,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட இருப்பதாக சொன்னார். இதுபோன்ற தகவல்கள் அங்கே பரப்பப்படுகிறதே தவிர, உண்மையிலேயே அதுபோன்ற தகவல்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. அரசாங்கம் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது அடுத்த ஐந்தாண்டுகளில் நமது தமிழ்நாட்டின் மின் தேவையை அதிக அளவில் நிறைவு செய்யக்கூடிய நிறுவனமாகவும் இருப்பதன் காரணத்தினால், நம் மின் தேவை மற்றும் மின் உற்பத்தியின் அளவீட்டினை கருத்திற்கொண்டு, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் இதை பொறுப்புணர்வோடு அணுக வேண்டும். அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: