கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் அமைந்துள்ள கடைகளில் வாடகை உயர்வை கண்டித்தும், அத்துமீறி கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், நேற்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வணிக வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் தேசிகன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர். பின்னர், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் பேசுகையில், ‘‘திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வணிக வளாகத்தில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை பயமுறுத்தும் வகையில் செயல் அலுவலர் செயல்படுகிறார்.

எனவே, வாடகையை குறைக்கவும், மாத வாடகை செலுத்தும்போது நிலுவை தொகையை தவணை முறையில் செலுத்தவும் வழிவகை செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள காய்கறி கடைகளுக்கு பொதுமக்கள் பெருமளவில் வந்து காய்கறிகளை வாங்கி செல்வர். ஆனால் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் பொருட்களை வாங்குவதால், மக்கள் இங்கு வருவது குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவோம்,’’ என்றார்.

Related Stories: