முகப்பேர், விருகம்பாக்கம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தவர் சிக்கினார்: 20 சவரன் பறிமுதல்

அண்ணாநகர்: முகப்பேர், விருகம்பாக்கம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 சவரன் நகைளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  முகப்பேர்  பகுதியை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார் (33). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பனிபுரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை போனது. புகாரின்பேரில், ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி விருகம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து   விசாரித்தனர். அதில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து (32) என்பதும், முகப்பேர் பகுதியில் இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. பின்னர், அவரை விருகம்பாக்கம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, ஜே.ஜே.நகர் போலீசார், நேற்று முன்தினம் முத்துவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், அவர் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து, கடந்த 2022ம் ஆண்டில் முகப்பேர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியவாறு, அதேபகுதியில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வந்ததும், போதுமான வருமானம் இல்லாததால், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து இன்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்த 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் போலீஸ் காவல் முடிந்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: