மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் மீதான நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் ஜோயா ஹசன் கூறுகையில், ‘‘இந்த நேரத்தில் ராகுலுக்கும் காங்கிரசுக்கும் இது பெரிய அடியாக தோன்றலாம். ஆனாலும், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த நடவடிக்கையை சாதகமாக மாற முடியும். இப்போது ராகுல் ஒரு ஹீரோவாகவும், இரக்கமற்ற அரசியல் அமைப்பிற்கு பலியாகிவிட்டார் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், உயர் நீதிமன்றத்திடம் இருந்து ராகுலுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால் அதுவும் சிக்கலாக மாறும். அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அது அவருக்கு பின்னடைவாக இருக்கும்’’ என்றார்.அரசியல் அறிவியல் பேராசிரியை சுசீலா ராமசாமி கூறுகையில், ‘‘ராகுலின் தகுதி நீக்கம் அவர் மீது பொதுமக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த விவகாரத்தை பாஜ பெரிது படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். இது இப்போது காங்கிரசுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடும்’’ என்றார்.