தூய்மை பணியாளரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு: கே.என்.நேரு அறிவிப்பு

சட்டசபையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி துப்புரவு தூய்மை பணியாளர் சுடலைமாடன் இறந்த நிகழ்வு குறித்து கடம்பூர் ராஜூ(அதிமுக), செல்வபெருந்தகை(காங்கிரஸ்), எஸ்.எஸ்.பாலாஜி(விசிக), வேல்முருகன்(தவாக) ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் வருகை சுகாதார மேற்பார்வையாளரால் பதிவு செய்யப்பட்டு கடந்த 17ம் தேதி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி, தற்போதுள்ள பேரூராட்சி மன்ற தலைவரினுடைய மாமியார் அங்கு வந்துள்ளார். தூய்மை பணியாளர் சுடலைமாடனைப் பார்த்து நீ தூய்மைப் பணியைத் தான் செய்ய வேண்டுமே தவிர வேறு பணிக்கு செல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

தம்மை அவமானப்படுத்தி விட்டார்களே? என்று இல்லத்திற்கு சென்று விஷம் அருந்தியுள்ளார். இந்த நிலையிலே, மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்த சுடலைமாடன் இறந்துள்ளார். உடனடியாக அங்கு மாவட்ட கலெக்டர் சென்று, யார் மீது குற்றம் சொன்னார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் உடன்குடி பேருராட்சி செயல் அலுவலர் பாபு ஆகிய இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. எஸ்சி,எஸ்டி சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, மேற்பார்வையாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. எனவே, இனி இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறாத அளவிற்கு அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அவர்களோடு தொடர்புகொண்டு, பேசுவோம்.

அதேநேரத்தில், சென்னை மாநகரகத்திலே கழிவு நீரை அகற்ற நிறைய கருவிகள் இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் அவசரம் அவசரமாக கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கிறோம் என்று அந்தப் பகுதியில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு சொல்லாமல் அவர்களாகவே சென்று இறங்கிவிட்ட காரணத்தால்தான் விஷ வாயு தாக்கி ஆங்காங்கு இறந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது கழிவுநீரை எடுப்பதற்குக்கூட, அனுமதி பெற்று தான் எடுத்து செல்ல வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்திருக்கிறோம்.  அதைக்காட்டிலும் டெல்லியிருந்து ஒரு பெரிய நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோன்று தூய்மைப் பணியாளர்கள் இறந்திருந்தால், அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக திட்டம் தீட்டப்பட்டு அதுவும் இப்போது நடைமுறையில் வரவிருக்கிறது. எனவே, இனி இதுபோன்று நடைபெறாத அளவிற்கு சிறப்பாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: