தமிழ்நாட்டில் பெண்களுக்கென தனி பட்ஜெட்: பேரவையில் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன்(பாஜ) பேசியதாவது:

பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த திட்டத்தை தொடங்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு, நில ஆர்ஜிதப் பணிகளுக்கான தொகைகள் ஒதுக்கப்பட்டு, வேலைகள் நடைபெற்றிருந்தாலும் கூட, வேகமாக அந்தப் பணிகள் நடைபெறவில்லை. அதை விரைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: கோவை மெட்ரோ பணிகளுக்கான டிபிஆர் அனுப்பப்பட்டுள்ளது. அவை பெறப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 85 சதவீத அளவுக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்க, உங்களது கட்சியான பாஜ தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே, நீங்களும் வலியுறுத்துங்கள்.

வானதி சீனிவாசன்: கோவை, மதுரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கான  உதவிகளை செய்வதற்கும் ஒன்றிய அரசிடம் பேசுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக  இருக்கிறோம்.

சபாநாயகர் அப்பாவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போன்றா? (அவரின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.)

அவை முன்னவர் துரைமுருகன்: வேலூரில் ஒரு பணி பற்றாக்குறையோடு உள்ளது. அதனை யாராவது  கவனித்தீர்களா? அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், மேலும் சிறிய அளவிலான  பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்தப் பணியும் முடிவுற்றால் நாங்கள் நேராக  கோவைக்கு விமானத்தில் சென்று இறங்குவோம். முதலில் அதை கவனியுங்கள்.

வானதி சீனிவாசன்: அவையின்  முன்னவர், எனது மாமனாருடைய ஊரைச் சார்ந்தவர். அங்கு கூட உதான் விமான  நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதையும்  நிச்சயமாக விடமாட்டோம்.

சபாநாயகர் அப்பாவு: மாமனார் ஊர் என்றால் அதுதானே உங்கள் ஊர்? ( அவையில் சிரிப்பலை எழுந்தது)

அவை முன்னவர் துரைமுருகன்: என்ன இருந்தாலும் எங்கள் ஊர் மாட்டுப்பெண் இல்லையா?

வானதி சீனிவாசன்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு கோவையில் நடத்த வேண்டும். கோவையில் சாலைகள் மோசமாக உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி: கோவை மாநகராட்சி சாலை பணிகளுக்கு ரூ.200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, ரூ.90 கோடியில் பணிகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அங்கு பாதாள சாக்கடை பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல், 114 கிலோ மீட்டர் மண் சாலையும் தார் சாலையாக மாற்றப்பட இருக்கிறது.

வானதி சீனிவாசன்: இதுபோன்ற பதில்தான் எப்போதும் வருகிறது. எங்கள் காதுகளும் பாவம் இல்லையா?.

அமைச்சர் செந்தில் பாலாஜி: நாளை (இன்று) கூட கோவை மாநகராட்சியில் ரூ.14 கோடி மதிப்பில் சாலை பணிகள் தொடங்க இருக்கிறது.

வானதி சீனிவாசன்: கோவையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசுடன் கலந்து பேச வேண்டும். குஜராத் மாநிலத்தில் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு என்று தனி பட்ஜெட் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.

 அமைச்சர் கீதா ஜீவன்: பாலினம் வாரியாக துறை சார்ந்த திட்டங்களின் பயனாளிகள் தொடர்பாக பூர்வாங்க கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அது வெளியிடப்படும்.

வானதி சீனிவாசன்: உரிமைத்தொகை ரூ.1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்களிடம் இனி ஆதார் கார்டு எண்ணை கேட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகம் முறை வாங்கிக் குடிப்பவர்களின் வீட்டு பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: தமிழக அரசு டாஸ்மாக வருமானத்தில் தான் இயங்குவதாக கூறுவது தவறு. கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஆனால், பாஜ ஆளும் கர்நாடகத்தில் மதுக்கடைகள் திறந்திருந்தன. 2006-11ம் ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தான் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் அதிகரித்தது. குடிப்பவர்கள் உயர்ந்ததால், இது அதிகரிக்கவில்லை. மது விலை உயர்த்தப்பட்டதால் வருமானம் அதிகரித்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: