அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் மாநிலங்கள் தங்கள் கல்விக்கொள்கையை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்க வேண்டும்

சென்னை: சென்னையில் இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ) தலைவர் சீதாராம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: புதிய கல்வி கொள்கையில் ஒரு சில வரவேற்கத்தக்க நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் நுழைவு தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம். 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவு தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுத முடியும். இதனால் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடராமல் நிறுத்தி விடுவார்கள். அது எதிர்காலத்தில் நடைபெற கூடாது.

அனைத்து மாநிலங்களும் தங்களுக்கென தனி கல்விக்கொள்கை வைத்துள்ளது. மாநிலங்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அவர்கள் கல்விக்கொள்கையை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்க வேண்டும். பூனை செல்வதற்கு ஒரு ஓட்டை, எலி செல்வதற்கு ஒரு ஒட்டையா என முன்னாள் முதல்வர் அண்ணா வார்த்தைகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு 2 மொழிகள் போதும், மூன்றாவதாக ஒரு மொழியை திணிக்க கூடாது. மாநிலங்களுக்கு தங்கள் கல்விக்கொள்கையை பின்பற்ற சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்தரங்கு வாயிலாக கோரிக்கை வைக்கிறேன். வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல நமக்கு ஆங்கிலம் கட்டாயம். தேவைப்பட்டால் விருப்பம் உள்ள மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

* தரமற்ற கல்லூரிகளை மூட ஆராய்ந்து முடிவு

ஏ.ஐ.சி.டி.இ தலைவர் சீதாராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘உயர்கல்வியில் கொண்டு வரப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதுதான் நோக்கம், கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வட்டார மொழிகளில் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தொழில் நிறுவனங்களுடன் சேர்த்து தொடர்பு ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சில தரமற்ற கல்லூரிகளை மூடுவது குறித்து ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும். உடனடியாக முடிவெடுக்க முடியாது’’ என்றார்.

Related Stories: