ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதேநேரத்தில் ஆளும் பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுலை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க கோரி, சபாநாயகர் இருக்கை முன்பு சென்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த கடும் அமளிக்கு மத்தியில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: