மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சட்டசபையில் பேசுவதற்கு உரிமை உள்ளது: சசிகலா பேட்டி!

நாகப்பட்டினம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சட்டசபையில் பேசுவதற்கு உரிமை உள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிகலா நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அதிமுக தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது. நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது.

கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அதிமுக-வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: