மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் டி.எம்.சௌந்தரராஜன் சாலையின் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1950-ல் ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் பின்னணி பாடத் தொடங்கியவர் டி.எம்.சௌந்தரராஜன். 1954ல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ அவரைப் புகழின் உச்சிக்கு தூக்கி சென்றது. ஐம்பதுகளில் தொடங்கிய அவரது இசை சாம்ராஜ்யம் 1980 ஆண்டு வரையில் நீடித்தது. சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் உட்பட பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 2000 மேற்பட்ட பாடல்களை டிஎம்எஸ் பாடியுள்ளார்.

காதல், தத்துவம், சோகம், துள்ளல் என எல்லா வகை உணர்வுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்தவர். அவர் கடந்த 2015 ஆண்டு மறைந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்ட சாலையில் உள்ள அவரது வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவரது நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கும் வகையில் அவர் வசித்த மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.செளந்தரராஜன் சாலை என பெயர் சூட்ட  பெயர் பலகையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  டி.எம்.சௌந்தரராஜன் நினைவாக இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

Related Stories: