சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு மது குடிக்க பணம் கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காரபள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன் (27). சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் உமேஷ் (24), மூர்த்தி (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம், யுகாதி பண்டிகையையொட்டி, விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று பணம் வைத்து சூதாடினர். அப்போது, உமேஷ், மூர்த்தி ஆகியோரிடம், மோகன் ரூ.20 ஆயிரத்தை தோற்று விட்டார். பணத்தை இழந்ததால் மனமுடைந்த அவர், மது குடிப்பதற்காக அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் உமேசும், மூர்த்தியும் அதே கடைக்கு டூவீலரில் வந்தனர்.  இதை கண்ட மோகன், அவர்களிடம் தன்னிடம் ஜெயித்த பணத்தில் இருந்து, மது குடிப்பதற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுத்ததால், மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உமேஷ், மூர்த்தி ஆகியோர், அரிவாளால் மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: