தாம்பரம் அருகே பரிதாபம் மழைக்கு ஒதுங்கிய காவலர் அரசு பஸ் மோதியதில் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே மழைக்கு ஒதுங்கிய போலீஸ்காரர் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த காட்டாங்ெகாளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (29). இவர், 2013ல் தமிழக காவல்துறையில் சேர்ந்தார். தற்போது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று மாலை மீண்டும் பணிக்கு செல்வதற்காக, அவரது பைக்கில் வீட்டிலிருந்து, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கனமழை பெய்ததால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு பகுதியில், ஆம்புலன்ஸ் நிற்கும் பகுதி அருகே மரத்தின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை கோயம்பேடு நோக்கி பயணிகளுடன் சென்ற, அரசு விரைவு பேருந்து (தடம் எண்:122) பைபாஸ் சாலை முகப்பு பகுதியில் வரும்போது, தறிகெட்டு ஓடி மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நின்ற நாகராஜன் மீது மோதி, அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில், படுகாயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நாகராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் காளிதாசை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: