செங்குன்றத்தில் பரபரப்பு மாமியாரின் கள்ளக்காதலன் சரமாரியாக வெட்டி கொலை: மருமகன் கைது

புழல்: செங்குன்றத்தில் மாமியாரின் கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மருமகனை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் அருகே பூச்சி அத்திப்பேடு, கள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60), ஓய்வுபெற்ற பால்பண்ணை ஊழியர். இவருக்கும் எடப்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எஸ்தருக்கு ஏற்கனவே கணவர் மற்றும் மகள் தீபிகா (25), மருமகன்  மணிகண்டன் (28) ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் எடப்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே கணவர் இல்லாத நேரங்களில், முத்துகிருஷ்ணனுடன் எஸ்தர் உல்லாசமாக இருந்து வந்ததை மருமகன் மணிகண்டன் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எஸ்தர்,  தீபிகா, மணிகண்டன் ஆகியோருடன் முத்துகிருஷ்ணன் இளநீர் அருந்தியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த மணிகண்டன், தனது மாமியாருடனான தொடர்பு குறித்து முத்துகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் முத்துகிருஷ்ணனை இளநீர் சீவும் அரிவாளால்  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

இதில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர்.  இந்நிலையில், நேற்று காலை அலமாதி முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: