அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறித்து அவதூறு செய்தி பத்திரிகை மீது அவை உரிமை மீறல் பிரச்னை: உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்தார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது, சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இப்பிரச்னை குறித்து ஆய்ந்து, அறிக்கை அளிப்பதற்காக அவை உரிமை குழுவிற்கு அனுப்பி வைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று வேல்முருகன் (தவாக): இந்த அவை என்பது மிக கண்ணியத்திற்குரிய, மாண்பிற்குரிய ஒரு அவை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தமிழக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் இருக்கைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கிற கணினியை கீழ்நோக்கி, அந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் அனைத்து பத்திரிகைகளையும் நான் குறை சொல்லவில்லை. குறிப்பாக ஒரு பத்திரிகை இதுகுறித்து நாடு முழுவதும் செய்தி வெளியிட்டிருக்கிறது. தலை சொறிந்து, திக்கித் திணறி, தூங்கி வழிந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று.

அதை சமூக வலைதளத்தில் இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கோடும், இந்த அவையினுடைய கண்ணியத்திற்கும், மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையிலும், பல்வேறு விதங்களில் இந்த செய்திகள் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அவைக்கும், இந்த அவையினுடைய மாண்புக்கும் ஒரு களங்கம் கற்பிக்கின்ற செய்தி வெளியிட்ட இந்த பத்திரிகையின் மீது இந்த அவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உரிமை மீறலை விதி 219-ன்கீழ் கொண்டு வருகிறேன் என்றார்.

சபா.ராசேந்திரன் (திமுக): சில அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தூங்கிக் கொண்டிருந்ததாக செய்தி வந்திருக்கிறது. இது இந்த அவைக்கு குந்தகம் விளைவிக்கின்ற ஒரு செயல். அதேபோல, உறுப்பினர்களுடைய உரிமையை மீறுகின்ற செயல். அந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிற அந்த பத்திரிகையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவை தலைவர் அப்பாவு: இப்பிரச்னையை மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, இதில் அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், இப்பிரச்னை குறித்து ஆய்ந்து, அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226-ன்கீழ், அவை உரிமைக் குழுவிற்கு அனுப்புகிறேன் என்றார்.

Related Stories: