ஆயுர்வேத மூலப்பொருள் சப்ளை செய்ய கமிஷன் தருவதாக கூறி இணையதளம் மூலம் ரூ.33.30 லட்சம் மோசடி: 4 நைஜீரியர்கள் கைது

சென்னை: ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய கமிஷன் தருவதாக கூறி இணையதளம் மூலம் ரூ.33.30 லட்சம் மோசடி செய்த நைஜீரியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், நைஜீரிய நாட்டை சேர்ந்த நேராரமோரிசன் என்பவர் LINKEDIN என்ற இணையதளம் மூலம் கடந்த டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு, இந்தியாவில் இருந்து மோனோட்ரோபா யூனிப்ளோரா என்ற ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய ஒரு வணிக கூட்டமைப்பை முன்மொழிந்து, பின்னர் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கமிஷன் தருவதாக கூறினார்.

இதை உண்மையென நம்பி ரூ.33.30 லட்சத்தை அவர் சொன்ன இரண்டு வங்கி கணக்குகளில் 8 பணப்பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். முதலீடு செய்த பிறகு நைஜீரிய நபர் கூறியபடி கமிஷன் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் முன்பணமாக செலுத்திய ரூ.33.30 லட்சமும் கிடைக்கவில்லை. எனவே என்னை திட்டமிட்டு ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மோசடி கும்பல் மும்பையிலிருந்து செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று கார்கர் ஏரியாவில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரிகாட்ல்வில் சைனாசா (32), உச்சே ஜன் இமேகா (47), காட்லின் இமானுவேல் (32), எபோசிடச்சென்னா எப்டான்லி (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப்கள், வங்கி கணக்கு அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், நைஜீரியர்கள் கார்கர், மும்பையில் தங்கியிருந்து லிங்க்டின் சமூக வலைதளம் மூலம் மக்களை தொடர்பு கொண்டு ஆயுர்வேத ஆயில் சப்ளை கமிஷன் என்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக பேசி வருவதும் தெரியவந்தது. மேலும் போலியான ஆயுர்வேத மூலப்பொருட்களை அனுப்பி ஆசை காட்டி நம்பவைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவது தெரியவந்தது.

Related Stories: