அதிமுக ஆட்சி காலத்தில் டியுசிஎஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.2 கோடிக்கும் மேலான நஷ்ட ஈட்டை வசூலிக்க வேண்டும்: கூட்டுறவு துறை அமைச்சரிடம் தொமுச வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் டியுசிஎஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் தொமுச சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் டியுசிஎஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள், தங்கள் சுயலாபத்திற்காக முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ரூ.2 கோடி அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது. புழல் மத்திய சிறைச்சாலை உணவகத்திற்கு, கடந்த 2011ம் ஆண்டில் டியுசிஎஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கிய மளிகை பொருட்களுக்கு உரிய விற்பனை தொகை ரூ.50 லட்சம் இதுவரை வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது.

தவறு செய்தவர்களிடம் இருந்து ரூ.50 லட்சத்தினை வசூலிக்க செய்திட வேண்டும். டியுசிஎஸ் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு வரை செயல்படுத்தி வந்த அரசு மதுபானக் கடைகளில் பார் நடத்திடும் அனுமதிக்காக, வாணிப கழகத்திற்கு செலுத்திய முன்வைப்பு தொகையான ரூ.50 லட்சத்தினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2011ம் ஆண்டு இறுதியில் டியுசிஎஸ் நிறுவனம் செயல்படுத்தி வந்த கூட்டுறவு மருந்தகங்களுக்கு காலாவதியான மருந்துகளையும், அதிகம் விற்பனையாகாத மருந்துகளையும் கொள்முதல் செய்ததனால் அப்போதைய மேலாண்மை இயக்குநர்களால் ரூ.40 லட்சம் வரை நஷ்டமாகி உள்ளது. எனவே நஷ்டத்துக்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு வழங்கி வரும் கோதுமை ஒதுக்கீட்டினை அதிகரித்திட வேண்டும். ரேஷன் கடைகளில் செயல்படும் பிஓஎஸ் மிஷின் பயன்பாட்டிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், இதனை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு வைபைக்கான செலவு தொகையாக குறைந்தபட்சம் ரூ.300 வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: