16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

அம்பத்தூர்: 16 வயது சிறுமியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி தனது 16 வயது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமி ஆந்திர மாநிலம் தடாவில் இருப்பதாக கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சிறுமியையும், அவருடன் இருந்த நபரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஆந்திர மாநிலம் தடாவிற்கு கடத்தி சென்றதும், பின்னர் அங்கு அறை எடுத்து தன்னை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், சிறுமிய கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விமல் ராஜ் (22), சில மாதங்களாக சிறுமியை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்வதாக கூறி அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், விமல் ராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: