2.5 லட்சம் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: சைபர் குற்றவாளிகள் 6 பேர் கைது

திருமலை: பல்வேறு நிறுவன ஊழியர்களின் உதவியுடன் 2.5 லட்சம் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடி வெளிச்சந்தையில் விற்பனை செய்த சைபர் குற்றவாளிகள் 6 பேரை சைபராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார்  நாட்டிலேயே மிகப்பெரிய சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து நேற்று 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் நாடு முழுவதும் 2.5 லட்சம் ராணுவ வீரர்கள் உள்பட 16.8 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி வெளிசந்தையில் விற்பனை செய்துள்ளது.  இவர்கள் மீது ஐதராபாத் நகரின் 3 காவல் ஆணையரகத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் பின்னணியிலேயே 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சைபராபாத் காவல்  ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாக்பூர், டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் கும்பல் நாடு முழுவதும் 16.8 கோடி பேரின் தகவல்களை திருடி வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். இதில் 2.5 லட்சம் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் தகவல்கள், 35 ஆயிரம் அரசு ஊழியர்களின் தகவல்கள், காப்பீடு மற்றும் கடன் கேட்டு விண்ணப்பித்த 4 லட்சம் பேரின் தகவல்கள், கோடிக்கணக்கான சமூக ஊடக ஐடிகள் மற்றும் கடவுச்சொற்களும் திருடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ளவர்களை 140 கேட்டகிரியின் கீழ் பிரித்து, சைபர் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பை சிதைக்கும் விதமாக தனிப்பட்ட தரவுகளை திருடி வெளிசந்தையில் விற்பனை செய்துள்ளனர்.

மோசடி செய்பவர்கள் காப்பீடு, கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன் விண்ணப்பங்களில் இருந்து பெரும்பாலான விவரங்களை சேகரித்துள்ளனர். தகவல் திருட்டு கும்பலுக்கு அந்தந்த நிறுவனங்களை சேர்ந்த சில ஊழியர்கள் உதவி செய்துள்ளனர்.  பாதுகாப்பாக இருக்க வேண்டிய வங்கிக் கணக்குகளில் இருந்தும் குற்றவாளிகள் தகவல்களை திருடி உள்ளனர். சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப  விற்பனை செய்துள்ளனர்.   ஏற்கனவே தெலங்கானா மாநில போலீசார், சைபர் குற்றவாளிகள் பலரை கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: