திருப்பரங்குன்றம் கோயிலில் 41 ஆண்டுகள் இருந்த யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 41 ஆண்டுகள் இருந்த யானைக்கு ரூ.30 லட்சம் செலவில் மணி மண்டபம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். முருகனின் முதற்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவ்வை என்ற கோயில் யானை இருந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள முகாமில் இருந்து 1971ம் ஆண்டு இந்த கோயிலுக்கு வந்த யானைக்கு கோயில் நிர்வாகம் அவ்வை என பெயர் சூட்டியது.

இதன்படி கோயில் யானையாக வலம் வந்த அவ்வை திருப்பரங்குன்றம் வந்து செல்லும்  பக்தர்கள் மட்டுமின்றி, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரிடமும் மிக அன்பாக இருந்தது. இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு மற்றும் முதுமை காரணமாக கடந்த 2012, ஜூலை 28ம் தேதி அவ்வை உயிரிழந்தது. இதையடுத்து அவ்வைக்கு கோயில் அருகே மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனால் அவ்வைக்கு ரூ.30 லட்சம் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதன்படி திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில்  மலைக்கு பின்புறம் தற்போதுள்ள பசுமடம் பகுதியில் மணி மண்டபம்  கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளை கோயில் நிர்வாகம்  துவக்கியுள்ளது. இதற்கு பக்தர்கள் மட்டுமின்றி இப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவ்வைக்கு அடுத்ததாக அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து கடந்த 2014,  டிசம்பர் மாதம் வந்த தெய்வானை எனும் யானை தற்போது திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: