பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து, டிவிட்டரில் அவதூறு வீடியோ பதிவு செய்த பிரதீப் என்பவரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது ெசய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பலர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி சார்பில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கிண்டல் செய்யும் வகையிலும், பெண்கள் குறித்து அவதூறாக காட்சி படுத்தப்பட்டிருந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார், டிவிட்டர் பதிவு மற்றும் வீடியோ பதிவு செய்த நபர் மீது ஐபிசி 153, 505(1)(பி), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவதூறு வீடியோ பதிவு செய்த கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த டிவிட்டர் கணக்கின் அட்மின் பிரதீப்(26) என்பவரை அதிரடியாக நேற்று கைது செய்தனர். அவரிடம் வீடியோ குறித்தும், யார் ஆலோசனைப்படி அவதூறு வீடியோ பதிவு செய்யப்பட்டது, பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: